சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு கலவரம் மூண்டுள்ளது. இன்று மோதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில் அங்கு இதுவரை 185க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உள்நாட்டு கலவரம்:
ஆப்ரிக்கா நாடான சூடானில் பல ஆண்டுகளாகவே உள்நாட்டுக் கலவரம் நடந்து வருகிறது. அங்கு நீண்ட காலமாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. ஆனால் அந்தப் புரட்சிக்குப் பின்னர் அவர்கள் எதிர்பார்த்தபடி ஜனநாயக முறையில் ஆட்சி அமையவில்லை. மாறாக அங்கு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சியிலும் மக்கள் நிம்மதியாக இல்லை.
அங்கு வறுமையும் தண்ணீர்ப் பஞ்சமும் தலை விரித்தாடுகிறது. ஒரு சில பகுதிகளில் விவசாயம் செழிப்பாக இருக்க வேளாண் வருமானம் முழுவதும் ராணுவத்தினரால் சுரண்டப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எண்ணெய் வளங்கள் மூலமாக வரும் வருமானமும் மக்களுக்கு முழுசாக நலத்திட்டங்களாக சென்று சேர்வதில்லை. இப்படி நாட்டில் ஒரு ஜனநாயக ஆட்சி இல்லாத நிலையில் இன்று அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது.
சூடானில் பயங்கர கலவரம் நடந்து கொண்டிருக்க சூடானைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
30 ஆண்டுகளாக ஒரே ஆட்சியாளார்
சூடானின் நீண்ட கால அதிபராக இருந்தவர் ஒமர் அல் பஷீர். இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு தொடங்கி 2019 ஆம் ஆண்டு வரை ஆட்சி அதிகாரித்தில் இருந்தார். முன்னாள் ராணுவ அதிகாரியான ஒமர் 1989-ல் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தை பிடித்தார். அவரது ஆட்சி உள்நாட்டு கிளர்ச்சிகளால் நிரம்பியது. நாட்டின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சியின் காரணமாக கடந்த 2011 தெற்கு சூடான் சுதந்திரம் பெற்றது.
போர் குற்றங்களை செய்ததாகவும் மனிநேயமற்ற குற்றங்கள் நிகழ்த்தியதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒமர் அல் பஷீர் மீது குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேச பிடி ஆணையை வழங்கியபோதிலும் 2010, 2015 தேர்தல்களில் ஒமர் சூடானில் தொடர்ச்சியாக வென்றார். இருப்பினும் அவரது கடைசி வெற்றி என்பது முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் கிடைத்தது.
இரண்டாக உடைந்தது..
சூடானில் உள்நாட்டுப் போர்கள் வலுத்ததால் அது வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாக உடைந்தது. 1955 முதல் 1972 வரை முதல் உள்நாட்டுக் கிளர்ச்சி நடந்தது. 1983 முதல் 2005 வரை இரண்டாவது கிளர்ச்சி நடந்தது. இந்த காலகட்டத்தில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். 2005ல் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் காரணமாக அங்கு தெற்குப் பகுதி தனியாக சுதந்திர நாடாக பொது வாக்கெடுப்பு மூலம் பிரகடனம் செய்யப்பட்டது. அதுவரை ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நாடாக இருந்த சூடானில் அந்தப் பிரிவினைக்குப்பின் கால்வாசி பகுதி தனி நாடானது. அதுமட்டுமல்லாது எண்ணெய் வயல்கள் பலவும் தெற்கு சூடானுக்கு சென்றுவிட்டது.
பின்லேடன் தொடர்பு
அல் கொய்தா தீவிரவாதக் குழுவின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லேடன் சூடானில் 5 ஆண்டுகள் வாழ்ந்தார். 1990களில் அவர் அங்கு வசித்தார். உள்ளூர் பொருளாதாரத்தில் பெரும் முதலீடுகள் செய்தார். ஆனால் 1996ல் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். 2 ஆண்டுகளுக்குப் பின்னர் அல்கொய்தா கென்யா, டான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் தாக்குதல் நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அமெரிக்கா சூடானின் மிகப்பெரிய மருந்து உற்பத்திக் கூடத்தை குண்டு வீசி தகர்த்தது. அந்த ஆலையில் ரசாயன குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. ஆனால் சூடான் அதனை திட்டவட்டமாக மறுத்தது.
கம் பவர்..
உலகிலேயே சூடானில் தான் கம் அராபிக் என்ற மூலப் பொருளை அதிகளவில் உற்பத்தி செய்கிறது. இது குளிர் பானங்கள், சூயிங் கம், மருந்து உற்பத்தி என நிறைய தொழிற்சாலைகளில் அத்தியாவசியப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது சூடானில் வளரும் அக்கேசியா மரங்களின் பிசின் ஆகும். அகேசியா மரங்கள் வறட்சியை தாக்குப்பிடிக்கக் கூடியது. இது காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சூடான் பாலைவனமாக மாறாமல் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகப் பொருளாதாரத்தில் இந்த கம் அராபிக் முக்கியப் பங்கு வகிக்க அமெரிக்கா 30 ஆண்டுகளுக்கு சூடான் மீது கம் அராபிக் வர்த்தகத்திற்கு தடை விதித்தது.
பிரமிடுகள்
பிரமிடுகள் என்றால் நமக்கு எகிப்து தானே நினைவுக்கு வரும். ஆனால் சூடானில் டாம்ப்ஸ் ஆஃப் மேரோ என்ற பெயரில் அதிகளவிலான பிரமிடுகள் இருக்கின்றன. 1960களில் 250 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை யுனஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் எகிப்து பிரமிடுகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் போல் சூடான் பிரமிடுகளைக் காண அவ்வளவாக யாரும் வருவதில்லை.