சீனாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில் அந்தரத்தில் தம்பதியினர் பறந்து சாகசம் செய்யும் போது எதிர்பாராத சோக சம்பவம் நிகழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


தொழில்நுட்பத்தில் பெருகி விட்ட இக்காலக்கட்டத்தில் மக்களுக்கு சர்க்கஸ் மீதான ஆர்வம் குறைந்து விட்டது என்றே சொல்லலாம். பறவை, விலங்குகளின் திறமைகள், உயிரை பணயம் வைக்கும் மனிதர்களின் சாகசங்கள் என சர்க்கஸை காண மக்கள் காட்டிய ஆர்வத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. இந்த சர்க்கஸ் குழுவினர் ஒவ்வொரு மாதமும் ஒரு ஒரு இடத்திற்கு போய் ஒரு மாதம் தங்கியிருந்து சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்துவர். 


இப்படியான நிலையில் இந்தியாவில் சர்க்கஸ் நடத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சீனாவில் இதுபோன்ற சர்க்கஸ் சாகசங்கள் மிகப் பிரபலமானவை. மக்களின் முக்கிய பொழுதுபோக்குகளிலும் ஒன்றாக உள்ளது. இப்படியான ஒரு நிகழ்ச்சியில் தான் எதிர்பாராத சம்பவம் நடைபெற்றுள்ளது. 


கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி அங்குள்ள அன்ஹுய் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சுஜோ நகரத்திலுள்ள ஹூகாவோ கிராமத்தில் ஒரு அக்ரோபாட்டிக் எனப்படும் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை  சுஹொங்க் மவ்மவ் மற்றும் சன் மவ்மவ் என்ற தம்பதியினர் நடத்தினர். இவர்கள் இருவரும் அந்தரத்தில் தொங்கியபடி ஒருவரையொருவர் பிடித்து சாகசம் செய்யும் செயல்களில் திறமை வாய்ந்தவர்கள். 






இப்படியான நிலையில் இந்நிகழ்ச்சியில் தம்பதியினர் இருவரும் பங்கேற்று வழக்கம்போல அந்தரத்தில் சாகசம் காட்ட தயாரானார்கள். நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டிருந்த நிலையில், சுஹொங்க் தனது உடலில் கயிறை கட்டியபடி எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும்  இல்லாமல் சாகசம் செய்துக் கொண்டிருந்தனர். 


அப்படியே சுஹொங்க் அந்தரத்தில் தொங்கியபடி கைகளில் இருந்து சன்னின் பிடியை விட்டுவிட்டு அவரை காலால் பிடிக்க வேண்டும் முயன்றார். அப்போது பிடி தவறியதால் கிட்டதட்ட 32 அடி உயரத்தில் இருந்து சன் கீழே விழுந்தார். சற்றும் எதிர்பாராத இந்நிகழ்வை கண்டு சுஹொங்க் உட்பட பார்வையாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 


இதனைத் தொடர்ந்து சன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இந்நிகழ்ச்சி குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அன்றி சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.