கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படாத பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான குக் தீவுகள் (Cook Islands) நாட்டில் முதன் முறையாக ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தென் பசிபிக் பெருங்கடலில் குக் தீவுகள்  நாடு அமைந்துள்ளது. 15 சிறிய தீவுகள் மொத்தம் 240 சதுர கிலோமீட்டர் (92.7 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு 168,000 பேர் சுற்றுலாப்பயணிகளாக இங்கு வந்துள்ளனர், சுற்றுலாத் துறை நாட்டின் முக்கிய வருவாய் மூலமாகும். 


இந்நிலையில், நியூ சிலாந்தில் இருந்து திருப்பி அனுப்பும் (Repatriation Flight) விமானத்தில் வந்த 10 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை, அந்த நாட்டின் பிரதமர் மார்க் பிரவுன் உறுதி செய்தார்.  பாதிக்கப்பட்ட சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ மேலாண்மை நெறிமுறையின்படி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 


கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குக் தீவுகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2020ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து குக் தீவுக்குள் நுழைய அனைத்து வகையான பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.




 


18,000 பிரஜைகள் கொண்ட இந்த நாட்டில், 96% பேர் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். முன்னதாக, கொரோனா பெருந்தொற்றுக்கான உயர்மட்ட தேசியப் பணிக்குழு, சுற்றுலாவை மேற்கொள்ள தனது எல்லையை மீண்டும் திறக்க அனுமதியளித்தது. அதன்படி, 2022 ஜனவரி மாதம் 12ம் தேதியில் இருந்து சுற்றுலா மற்றும் வர்த்தகம் ஆகியவற்றிற்காக எல்லைகளைத் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.   


இந்நிலையில், சிறுவனுக்கு கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டதால், எல்லைகளை மீண்டும் திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமா? என்ற  கேள்வி எழுந்துள்ளது. நாட்டு மக்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில், " எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு சுற்றுலா மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை பாதுகாப்பான வகையில் மேற்கொள்ள தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். தடுப்பு நடவடிக்கைகளின் பயனாய் விமான நிலையத்தில் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.