Congo Flood : கிழக்கு காங்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கனமழை


ஆப்பிரிக்க கண்டத்தில் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு தான் காங்கோ. காங்கோவில் அதிபர் பெலிக்ஸ் தெஷிக்சேடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், கிழக்கு காங்கோவில்  திடீரென இரவு முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள ஏரிகள், ஆறுகள் நிரம்பி நீர் பெருக்கெடுத்து ஓடின. இதனால் வெள்ளத்தில் சில கிராமங்கள் முழ்கியதோடு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.


கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சாலைகள், பள்ளிகள், கட்டடங்கள், மருத்துவமனைகள் என அனைத்துமே வெள்ளத்தில அடித்து செல்லப்பட்டது. மேலும், இதில் குழந்தைகள் உட்பட பலரும் அடித்து செல்லப்பட்டனர். 


200 பேர் உயிரிழப்பு


இந்நிலையில், கிழக்கு காங்கோவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 200 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காணாமல் போன 100க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். சிலர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி காயமடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிசைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மீட்பு பணிகள் நடந்துக் கொண்டு இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 









இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெள்ளப்பெருக்கு காங்கோவில் நான்கு முறை ஏற்பட்டது. மத்திய ஆப்பிரிக்காவில் கனமழை பெய்து வந்தால் இதுபோன்று பாதிப்புகள் ஏற்படுகிறது.  கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் காரணமாக ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் கனமழை பெய்த வண்ணமே உள்ளது. கடந்த மாதம் தென் கிவுவின் அண்டை மாகாணமான வடக்கு கிவுவில் கனமழையால் சுமார் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்.


தற்போது காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 200 பேர் உயிரிழந்தாகவும் மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை (திங்கட்கிழமை) தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுவதாகவும்" தெரிவித்துள்ளார்.


மற்றொரு சம்பவம்


சமீபத்தில் கடுமையான வறட்சி நிலவும் நாடுகளுள் ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா ஒன்றாகும். இங்க சமீபத்தில் பெய்த தொடர் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள நதிகளின் நீர்வரத்து அதிகரித்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இந்த வெள்ளப்பெருக்கால் சுமார் 21-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.