Migration Of Birds | எதிர்கால ஆபத்து இதுதான்... உலகுக்கு வலசை பறவைகள் கொடுக்கும் பகீர் எச்சரிக்கை!

4000 பறவையினங்களில் 40 சதவீத பறவைகள் வருடந்தோறும் புலம்பெயர்ந்து தன் சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்புகின்றன.

Continues below advertisement

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு புலம்பெயரும் பறவைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

துர்ஹாம் பல்கலைகழகத்தின் சூழலியல் நிபுணர் கெய்ரான் லாரன்ஸ் தனது ஆய்வை நடத்தி குளோபல் சேஞ்ச் பயோலஜி எனும் இதழில் வெளியிட்டார். ஆய்விற்காக 1964ம் ஆண்டு முதல் 2019 வரை பறவை ஆர்வலர்கள் சேகரித்த தகவல்களை கெய்ரான் லாரன்ஸ் எடுத்துக்கொண்டார். அவருடன் சேர்ந்து மேலும் சிலரும் ஆய்வில் ஈடுபட்டனர். காலநிலை மற்றும் தாவரங்களில் ஏற்படும் மாற்றங்களை ஒப்பிட்டு அதன்மூலம் புலம்பெயரும் பறவைகளின் வருகை மற்றும் புறப்பாடு ஆகியவற்றில் மாற்றங்கள் இருந்ததை ஆய்வாளர்கள் கவனித்தனர்.

4000 பறவையினங்களில் 40 சதவீத பறவைகள் வருடந்தோறும் புலம்பெயர்ந்து தன் சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்புகின்றன. ஆனால் புலம்பெயரும் பறவைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே நிலைத் தொடர்ந்தால் சில பறவைகள் ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளுக்கு சென்று அங்கு நேரத்தை செலவிடாது என்றும் அதற்கு பதிலாக, ஐரோப்பாவிலேயே வருடம் முழுக்க தங்கிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவை பறவைகளின் இனப்பெருக்கத்தை பாதிக்கக் கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை ஐரோப்பா மட்டுமல்லாது மற்ற குளிர் பிரதேசங்களிலும் உள்ள மற்ற இனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

இவ்வாறு புலம்பெயரும் பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெயராமல் இருந்தால், அவை புலம்பெயராமல் எப்போதும் ஓரிடத்திலேயே வசிக்கும் பறவைகளின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். புலம் பெயராத பறவைகளின் உணவையும் சேர்த்து அவை எடுத்துக் கொள்ளக்கூடும். அதேபோல புலம்பெயர வேண்டிய இடங்களிலும் சுற்றுச்சூழல் தாக்கத்தை அவை ஏற்படுத்தக்கூடும். ஆப்பிரிக்காவின் சஹாரா போன்ற இடங்களில் புலம்பெயர்ந்த பறவைகள் செலவிடும் நேரத்தைக் குறைப்பதன் மூலம் பூச்சிகளை உட்கொள்வது குறையும், அதன் மூலம் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். மேலும் விதை பரவல் குறையும், மகரந்த சேர்க்கை பாதிப்பு போன்ற சூழலியல் தாக்கங்களை ஏற்படுத்தும். இதனால் காடுகள் அழிய வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே வெப்ப மண்டலக் காடுகளில் வழக்கத்தை விட இரண்டு மாதங்கள் அதிகமாக பறவைகள் செலவிடுகின்றன. நைட்டிங்கேல்ஸ் மற்றும் வில்லோ வார்ப்ளர்ஸ் வகை பறவைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 


முன்னதாக, இந்த ஆண்டு நீலகிரிக்கு வருகை தரும் புலம்பெயர் பறவைகள் இந்த ஆண்டு தாமதமாக வந்தன. தொடர்மழை மற்றும் உறைபனி பொழிவு குறைவு ஆகியவைதான் அதற்கு முக்கியமான காரணமாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு காலநிலை மாற்றம் காரணமாக பறவைகள், மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் நிறைந்த உலகின் உயிர்ச்சூழலே பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola