ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினை ஒரு சைக்கோ என விமர்சித்த மாடல் அழகி சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது ரஷ்யா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த மாடல் அழகி கிரேட்டா வெட்லர் (23). ரஷ்ய மாடல் என்றாலே உயருமும் ஸ்லிம்மான உடல் வாகும், அழுத்தமான பார்வை வீச்சும் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எப்போதுமே மாடலிங் உலகில் நல்ல வரவேற்பு இருக்கும்.
அப்படி தான் சார்ந்த துறையில் கோலோச்சியவர் தான் மாடல் அழகி கிரேட்டா வெட்லர்.
இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் இவர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சைக்கோ என விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த கருத்தின் விவரம் இதுதான்.
புடின் சிறுவயதில் நிறைய அவமானங்களை சந்தித்துள்ளார். அவரது உடல் வாகு அதற்குக் காரணமாக இருந்துள்ளது. உடல் கேலியால் சிறுவயதிலேயே அவர் பெரிய அவமானங்களை சந்தித்ததால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் அவர் பயின்றுவந்த சட்ட பள்ளியிலிருந்து வெளியேறி தேசிய பாதுகாப்பு முகமையில் இணைந்தார். சிறுவயதில் உடல் கேலிக்கு ஆளாகி சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளான குழந்தைகள் உளவியல் ரீதியாக அச்ச உணர்வுடனேயே இருப்பார்கள். சிறு சப்தமும், அன்னியர்களின் வருகையும், இருட்டும் அவர்களை மிகவும் பயமுறுத்தும். எனவே எப்போதுமே எச்சரிக்கை உணர்வுடன் இருப்பார்கள். சமூகத் தொடர்பை அதிகம் விரும்பமாட்டார்கள். சுயகட்டுப்பாடு என்ற பெயரில் பெரிய சுமைகளை தங்களுக்கே விதித்துக் கொள்வார்கள். இந்த குணநலன்கள் புடினிடமும் இருக்கிறது. அதனால் புடினுக்கு மனநோய் காணப்படுவதாக என்னால் யூகிக்க முடிகிறது.
இவ்வாறு அந்தப் பதிவில் மாடல் அழகி பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த பதிவு போட்டு ஒரு மாதம் கழித்து ரஷ்ய அழகி கிரேட்டாவை காணவில்லை.
திடீரென கிரேட்டா காணாமல் போனது குறித்து அவரது நண்பர் இவ்ஜெனி பாஸ்டர் போலீஸில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் அவரைத் தேடிய நிலையில்தான் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதுவும் சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் கிரேட்டாவின் முன்னாள் காதலரை கைது செய்துள்ளனர்.
கிரேட்டாவின் முன்னாள் காதலரான டிமிட்ரி கொரோவ் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் "நான்தான் கிரேட்டாவை கழுத்தை நெரித்துக் கொன்றேன். அவளது சடலத்தை பெட்டிக்குள் அடைத்து வைத்தேன். அவளைப் பற்றிய சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவளுடைய சமூக வலைதள பக்கங்களை நானே இயக்கி புகைப்படங்களை வெளியிட்டேன்" எனக் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா எப்போதுமே மர்மங்கள் நிறைந்த தேசம் எனலாம். அங்கு அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் சிறைக்குச் செல்வதும், சிறைச் சேதத்தை சந்திப்பதும் இல்லை காணாமல் போவதும் புதிதல்ல. கிரேட்டாவும் அப்படி ஏதும் கொல்லப்பட்டாரா. அதன் பழி அவர் காதலர் மீது சுமத்தப்பட்டதா இல்லை உண்மையிலேயே முன்னாள் காதலர் தான் கொலைகாரரா என்பதெல்லாம் புரியாத புதிர்.