வட சீனாவின் லோங்ஜிங் நகரில் அமைந்திருக்கிறது பியான்க்ஷன் கண்ணாடி நடைபாலம். முழுவதும் கண்ணாடியால் ஆன இந்த நடைபாலம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது 100 மீட்டர் உயரத்திலும், சுமார் 400 மீட்டர் நீளத்திற்கும் அமைந்துள்ளது.



பியான் மலைப்பிரதேசத்தில் கடுமையான வானிலை நிலவிக்கொண்டிருக்கும் சூழலில், சுற்றுலா பயணி ஒருவர் கண்ணாடி நடை பாலம் மீது இயற்கையை ரசித்தவாறு சென்றுருக்கிறார். அப்போது பலமான காற்று வீச, காற்றின் வேகத்தில் அவரின் காலுக்குக் கீழ் இருந்த கண்ணாடிகளில் வெடிப்பு ஏற்பட துவங்கியிருக்கிறது. சுதாரிக்க தொடங்கிய சுற்றுலா பயணி பாலத்தின் ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளை பிடித்துக் கொண்டார். காற்றின் வேகத்தில் கீழே இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி மலைகளில் போய் மோதின.



கண்ணாடி பாலத்திற்கு கீழே குறுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளில் உட்கார்ந்துகொண்டு, இரும்பாலான தடுப்பு வேலியை கைகளால் பிடித்துக்கொண்டு 100 மீட்டர் உயரத்தில் சுற்றுலா பயணி தவித்து கொண்டிருக்கும் புகைப்படம் காண்போர் அனைவரையும் உறையச் செய்கிறது. இதனையறிந்த மீட்பு படை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை காப்பாற்றியுள்ளது. அதிர்ஷ்டவசமாக கண்ணாடிகள் நொறுங்கி கீழே விழுந்த நிலையிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி மறு உத்தரவு வரும் வரை பியான்க்ஷன் கண்ணாடி நடைபாலம் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. காப்பாற்றப்பட்ட அந்த நபர் உடனடியாக மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டு, அவருக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது..