சீனா நாட்டு சிறுமி, 13 வயதில் பரதநாட்டியத்தில் அரங்கேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் சமீப காலமாகவே, பரதநாட்டியம் பிரபலமடைந்து வருகிறது.


சாதனை படைத்த சீன நாட்டு சிறுமி: புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் லீலா சாம்சன், இந்திய தூதர்கள் மற்றும் ஏராளமான சீன ரசிகர்களின் முன்னிலையில் லீ முசி என்ற சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அரங்கேற்றம் செய்துள்ளார்.


இந்தியாவின் பாரம்பரிய நடனக்கலையான பரதநாட்டியத்தை கற்று கொள்ள சீனாவில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக, பலர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். பல ஆண்டுகளாக கற்று வருகின்றனர்.


இந்த நிலையில், சீன வரலாற்றில் முதல்முறையாக பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்துள்ளது. எனவே, லீ முசியின் அரங்கேற்றம், சீன பரதநாட்டிய கலைஞர்களுக்கு ஓர் மைல்கல்லாக அமைந்துள்ளது. அரங்கேற்றம் என்பது பரதநாட்டிய கலைஞர்கள், நிபுணர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்பு மேடையில் முதல் முறையாக நடனமாடுவது ஆகும்.


அரங்கேற்றம் என்றால் என்ன? அரங்கேற்றத்திற்குப் பிறகுதான் மாணவர்கள் சொந்தமாக நடனமாட அனுமதிக்கப்படுகிறார்கள். ஆர்வமுள்ள நடனக் கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்க அனுமதிக்கப்படுவார்கள். லீ முசியின் அரங்கேற்றம் குறித்து இந்திய தூதரகத்தின் (கலாச்சார) முதன்மை செயலாளர் டி.எஸ். விவேகானந்த் கூறுகையில், "சீனாவில் முழுப் பயிற்சி பெற்று சீனாவில் நிகழ்த்திய முதல் அரங்கேத்திரம் இதுவாகும். இது பாரம்பரியமான முறையில் ஒழுங்காக செய்யப்பட்ட அரங்கேற்றம்" என்றார்.


"சீன ஆசிரியரால் பயிற்சி பெற்ற சீன மாணவர் ஒருவர் சீனாவில் முதலமுறையாக அரங்கேற்றம் செய்து முடித்துள்ளார். இது பரதநாட்டிய பாரம்பரிய வரலாற்றில் ஒரு மைல்கல்" என்று லீக்கு பயிற்சி அளித்த சீன பரதநாட்டிய நடனக் கலைஞர் ஜின் ஷான் ஷான் குறிப்பிட்டார்.






 


லீயின் அரங்கேத்திரத்தில் இந்திய தூதர் பிரதீப் ராவத்தின் மனைவி ஸ்ருதி ராவத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இரண்டு மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியின் போது பல கிளாசிக்கல் பாடல்களுக்கு நடனமாடி அவரை உற்சாகப்படுத்தினர்.


ஜின் என்பவர் நடத்தும் பரதநாட்டியப் பள்ளியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக லீ பயிற்சி பெற்றுள்ளார். கடந்த 1999 இல், டெல்லியில் பரதநாட்டிய நடனக் கலைஞர் ஜின் தனது அரங்கேற்றத்தை நடத்தினார்.