DF-5C Nuclear Missile: சீனாவின்  DF-5C எனப்படும் அணு ஆயுத ஏவுகனை சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து இலக்கை தாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

சீனாவின்  DF-5C அணு ஆயுத ஆவுகணை:

பீஜிங்கில் நடந்த பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பின் போது, ​​சீனா தனது சமீபத்திய அணுசக்தி திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான டோங்ஃபெங்-5C (DF-5C) ஐ காட்சிப்படுத்தியது. இந்த நிகழ்வை அதிபர் ஜி ஜிங்பிங் மேற்பார்வையிட, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உட்பட 20 உலகத் தலைவர்கள் கண்டு களித்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

DF-5C -யின் சிறப்பம்சங்கள்:

டோங்ஃபெங்-5 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட எடிஷனான DF-5C, சிலோ அடிப்படையிலானது மற்றும் நிலத்தடி கட்டமைப்புகளில் இருந்து ஏவப்படுகிறது. பாதுகாப்பு ஆய்வாளர் அலெக்சாண்டர் நீல் கருத்துப்படி, இந்த ஏவுகணை சுமார் 12,400 மைல்கள் தூரம் அதாவது சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டுள்ளது. இதன் மூலம் சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்க முடியும் என கூறப்படுகிறது. இது ஒரே நேரத்தில் 12 அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடிய வல்லமையை பெற்றுள்ளது.  எல்லை பாதுகாப்பு மற்றும் எதிரிகளை அழிப்பதற்கான சீனாவின் திறனை இந்த ஏவுகணை பல மடங்கு உயர்த்துகிறது. இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவை மட்டுமின்றி, உலகின் எந்தவொரு நாட்டையும் சீனாவால் இலக்காக்க முடியும் என கூறப்படுகிறது.

அதிக ரேஞ்ச் கொண்ட ஏவுகணைகள்:

DF-5C ஏவுகணை 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் என கூறப்படும் நிலையில்,ஏற்கனவே உள்ள சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் சில ஏவுகணைகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி,

  • ரஷ்யாவின் R-36M ஏவுகணை 16 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்குமாம்
  • சீனாவின் டோங்ஃபெங்-41 ஏவுகணை 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்குமாம்
  • சீனாவின் டோங்ஃபெங்-5A ஏவுகணை 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்குமாம்
  • வடகொரியாவின் வசோங்-15 ஏவுகணை குறைந்த எடையுடன் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்குமாம்
  • ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக்கூடிய R-292RMU ஏவுகணை 11,500 கிலோ மீட்டர் தூரம் பயணிக்குமாம்

இந்தியா, அமெரிக்காவின் நிலை என்ன?

அமெரிக்கா தரப்பில் இருந்து UGM-133 ட்ரைடெண்ட் II எனும் ஏவுகணை அதிகபட்சமாக 11 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து இலக்கை தாக்கும் திறனை கொண்டுள்ளது. அதேநேரம், இந்தியா சார்பில் அக்னி 5 ஏவுகணை அதிகபட்சமாக 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டுள்ளது என கூறப்படுகிறது.

கவனத்தை ஈர்த்த ஆயுதங்கள்:

பேரணியில் DF-5C உடன்,  மற்ற அணுசக்தி திறன் கொண்ட அமைப்புகளையும் சீனா காட்சிப்படுத்தியது, இதில் DF-61 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் அடங்கும். இது ஒரு மொபைல் லாஞ்சரில் இருந்து ஏவப்படலாம் மற்றும் வார்ஹெட்ஸ் எனப்படும் பல வெடியுலைகளை 7,500 மைல்களுக்கு மேல் சுமந்து சென்று இலக்கை தாக்கும் என்று நம்பப்படுகிறது. இதுபோக, விமானம் மற்றும் கடற்படைக் கப்பல்களில் இருந்து ஏவப்படக்கூடிய JL-1 மற்றும் JL-3 ஏவுகணைகளும் இடம்பெற்றன, இவை சீனாவின் அணுசக்தி முப்படைத் திறன்களை காட்சிப்படுத்தின.

லேசர் ஆயுதங்கள்:

முதல் முறையாக, சீனா கவச லாரிகளில் பொருத்தப்பட்ட LY-1 லேசர் ஆயுதத்தைக் காட்சிப்படுத்தியது. இந்த அமைப்பு மின்னணு சாதனங்களை செயலிழக்கச் செய்யும் அல்லது விமானிகளைக் குருடாக்கும் சக்தியைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த அணிவகுப்பு, ட்ரோன் தொழில்நுட்பத்தில் சீனாவின் முன்னேற்றத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இதில் AI- மூலம் இயங்கும் ட்ரோன்கள் மற்றும் சுமார் 65 அடி நீளம் கொண்ட AJX002 ராட்சத நீர்மூழ்கிக் கப்பல் ட்ரோன் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டன.