ஆபரேஷன் சிந்தூரின் போது, எதிரி நாட்டு ஏவுகணைகளை துவம்சம் செய்த எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை நாம் மறந்துவிட முடியாது. இந்த எஸ்-400 ஏவுகணை அமைப்பு ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டதாகும். இந்நிலையில், எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ரஷ்யாவும், இந்தியாவும் ஆராய்ந்து வருவதாக ரஷ்ய நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கிரெம்லின் அதிகாரி கூறியது என்ன.?
இது குறித்து கூறியுள்ள ரஷ்ய அரசு ஊடகம், அந்நாட்டு ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டாட்சி சேவையின் தலைவர் டிமிட்ரி ஷுகாயேவ் தெரிவித்ததாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளது. அதன்படி, “இந்தியா ஏற்கனவே எங்கள் எஸ்-400 அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த துறையிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறியதாக தெரித்துள்ளது.
மேலும், “புதிய விநியோகங்கள், இதுவரை நாங்கள் இதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்“ என்று டிமிட்ரி ஷுகாயேவ் கூறியுள்ளார். சுகோய்-57 போர் விமானங்களை வழங்குவது, இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் மற்றொரு பகுதியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநட்டில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட சமிக்ஞை
சீனாவின் தியான்ஜினில், திங்களன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த நிலையில், டிமிட்ரி இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 50 சதவீத வரிகளை விதித்த நிலையில், ஷாங்காய் உச்சிமாநாட்டில் இந்திய, ரஷ்ய தலைவர்கள் புதினின் காரில் அந்த இடத்திற்கு ஒன்றாக வந்தது அமெரிக்காவிற்கு ஒரு சமிக்ஞையாகவே கருதப்பட்டது.
ஆகஸ்ட் 27-முதல் அமலுக்கு வந்த அந்த வரிகளில் பாதி, உக்ரைன் போரை மீறி, ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை குறிவைக்கிறது. அக்டோபர் 2018-ல், நீண்ட தூரம் தரையிலிருந்து வான் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் அமைப்பான எஸ்-400 ட்ரையம்ஃப் வாங்குவதற்காக, இந்தியா ரஷ்யா உடன் 5.4 பில்லியன் டாலர்கள் அளவிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பாகிஸ்தான் ஏவுகணைகளை பதம் பார்த்த எஸ்-400 அமைப்பு
இந்த எஸ்-400 அமைப்பு, கடந்த மே மாதம் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது, எல்லைக்கு வெளியிலிருந்து ஏவப்பட்ட பாகிஸ்தானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து நடுநிலையாக்குவதன் மூலம், இந்தியாவின் உள்நாட்டு வான் பாதுகாப்பு வலையமைப்புடன் சேர்ந்து, எஸ்-400 அமைப்புகள் செயல்பட்டன.
இதற்கிடையே, இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையான பிரமோஸ், பாகிஸ்தானின் பல விமானப்படை தளங்களை துல்லியமாக தாக்கி அழித்ததுடன், போரை நிறுத்துமாறு பாகிஸ்தானையும் கெஞ்ச வைத்தது குறிப்பிடத்தக்கது.