பீஜிங்: இந்திய எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் புத்தாண்டு தினத்தன்று சீனக் கொடியைப் பறக்கவிட்டு அந்நாட்டு வீரர்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.


சீனாவுடனான எல்லைப் பிரச்சனை விவகாரத்தில் தொடர்ந்து பாஜக எதிர்கட்சிகளின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.


அண்மையில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியது பெரும் சர்ச்சையானது. இப்போது புத்தாண்டில் புது சர்ச்சையாக, கல்வானில் செவ்வண்ண கொடியை ஏற்றி சீனா மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக சீன அரசின் சார்பில் பல்வேறு அமைப்புகளும் வீடியோவை வெளியிட்டு மார் தட்டியுள்ளன. சீன அரசின் சார்பு ஊடகமான குளோபல் டைம்ஸ் தனது ட்விட்டரில், ஒரு அங்குல நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்கக் கூடாது. பிஎல்ஏ வீரர்களின் புத்தாண்டு வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளது.






இதே போல் சீன அரசு சார்பு ஊடகவியலாளரான ஷென் ஷிவெய், 2022 புத்தாண்டு நாளில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனக் கொடி கம்பீரமாக பறந்தது என்று பதிவிட்டுள்ளார்.









இந்நிலையில் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக சாட்டையை சுழற்றத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், கல்வான் பள்ளத்தாக்கில் நமது மூவர்ணக் கொடி அழகாக இருக்கும். சீனாவுக்கு பதிலடி கொடுங்கள் மோடி என்று பதிவிட்டுள்ளார்.


அண்மையில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயரை சீனா மாற்றியதைக் கண்டித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "அருணாச்சலப் பிரதேசம் இன்றும், என்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்குள்ள பகுதிகளுக்கு சீனா புதிதாக பெயர்களை வைத்துவிடுவதால் மட்டும் இந்த உண்மை மாறிவிடாது. சீனா இப்படி அத்துமீறுவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னால் 2017லும் இதுபோன்ற சம்பவங்களில் சீனா ஈடுபட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.


இந்தப் பதிலை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்திருந்தார். அதில் அவர், வெறும் வார்த்தைகள் போதாது. தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வெற்றியை நிலைநாட்டவும் உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.






சீனாவின் புதிய எல்லைச் சட்டம்:
சீனாவின் தேசிய சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் வரும் ஜனவரி 2022 முதல் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய சட்டத்தில், எல்லைப் பகுதிகளை பாதுகாப்பதற்காக சீன அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும். எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக  அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். எல்லைப் பகுதிகளில் சமூக மேம்பாடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வழங்கிட இந்த சட்டம் வழி செய்யும் அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளில் சுமூகத்தீர்வு காண இந்த சட்டம் வழி செய்யும் என்பன போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.