டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் எல்லுசாமி இருந்து வருகிறார். சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவு தொடர்பான ஒருவர் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில்,”டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவில் இருக்கும் ஆண்ட்ரெஜ் குறித்தே பேசி வருகின்றனர். ஆனால் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள அசோக் மிகவும் முக்கிய பங்கு வகித்தார். டெஸ்லாவின் ஆட்டோ பைலட் குழுவில் உலகின் சிறந்த பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு பதில் பதிவாக டெஸ்லா நிறுவனத்தின் சிஇஒ எலோன் மஸ்க் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், “டெஸ்லா நிறுவனம் ஆட்டோ பைலட் குழுவை தொடங்கும் என்னுடை ட்விட்டர் அறிவிப்பின் மூலம் தேர்வான முதல் நபர் அசோக்தான்” எனப் பதிவிட்டுள்ளார். அதாவது 2015-ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனம் ஆட்டோ பைலட் குழுவை தொடங்குகிறது என்ற அறிவிப்பை எலோன் மஸ்க் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் அந்தக் குழுவில் இணைய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று அந்த ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருந்தார்.
அந்தப் பதிவின் மூலம் அசோக் எல்லுசாமி டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவில் தேர்வாகியிருந்தார். இதை சுட்டிக்காட்டி எலோன் மஸ்க் தற்போது ட்வீட் செய்துள்ளார். இந்தச் சூழலில் யார் இந்த அசோக் எல்லுசாமி? எப்படி டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவில் இணைந்தார்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக் எல்லுசாமி கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின்னர் ரோபோடிக்ஸ் பிரிவில் மேல்படிப்பை கார்னேகி மெல்லான் பல்கலைக் கழக்கத்தில் முடித்தார். அங்கு படிக்கும் போதே செயற்கை நுண்ணறிவு தொடர்பான விஷயங்களில் இவர் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். அதன்பின்பு வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் எல்கட்ரிக் ஆராய்ச்சி மையத்தில் இவர் பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து WABCO நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். 2015-ஆம் ஆண்டு டெஸ்லா போட்ட ட்விட்டர் பதிவை தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ குழுவில் இணைந்தார். அதன்பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது அந்தக் குழுவின் இயக்குநராக உயர்ந்துள்ளார்.
மேலும் படிக்க: ஒரே நாளில் 16 முறை சூரிய உதயம்.. ஆனாலும் இதுதான் நியூ இயர் ஃபர்ஸ்ட் - நாசாவின் வைரல் போட்டோஸ்!