சுதந்திரம் பெற்றதில் இருந்தே காஷ்மீர் விவகாரம் பெரிய பிரச்சினையாக உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தங்களுக்கு சொந்தமான பகுதி என பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்திய தரப்பில் பதில் அளிக்கப்பட்டு வருகிறது.


மற்ற நாடுகளை பொறுத்தவரையில், காஷ்மீர் விவகாரத்தில் நடுநிலையுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே சீனா செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை தகராறில் பதற்றம் அதிகரித்து வருவதால், பதற்றத்தை அமைதியான முறையில் தீர்க்குமாறு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வலியுறுத்தப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது.


பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், பாகிஸ்தான் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் தீர்க்க வேண்டும்; ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


காஷ்மீர் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு நிலையானதாகவும் தெளிவானதாகவும் உள்ளது என்றும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்கள் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 


"இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வரலாற்றுப் பிரச்சினையாகும். ஐநா சாசனம், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின்படி அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினர் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.


ஆனால், மோதலைத் தீர்க்கவும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணவும் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனையில் ஈடுபட வேண்டும்" எனத் தெரிவித்தார்.


சீனா உள்பட பல நாடுகள் இவ்விவகாரத்தில் தங்கள் கருத்துக்களை அடிக்கடி தெரிவித்தாலும், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பினரின் தலையீட்டை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான விவகாரம் முழுக்க முழுக்க உள்நாட்டு பிரச்சினை என்றும் இந்தியா விளக்கம் அளித்து வந்துள்ளது.


இந்த ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம், "சீனா உள்பட மற்ற நாடுகளுக்கு இந்த பிரச்சினையில் கருத்து தெரிவிக்க உரிமை இல்லை. இந்தியா தனது உள் விவகாரங்களில் பொது தீர்ப்பை தவிர்க்கிறது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என்று கூறியது. 


ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பல ஆண்டுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிட்டு வருகின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதம் பாகிஸ்தானில் இருந்து நாட்டிற்குள் ஊடுருவி வருகிறது என இந்திய தரப்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வந்தபோது, இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.