மொத்தம் 16 காட்டுயானைகள் கொண்ட மந்தை மூன்று மாதங்களாக சீனா முழுக்க நடையோ நடை என நடந்துகொண்டிருக்கின்றன. சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜிஷுவாங்க்பன்னா பாதுகாக்கப்பட்ட காடுகளில் இருந்து கடந்த மார்ச் மாதம் வெளியேறிய இந்தக் காட்டு யானைகள் தற்போது வரை சுமார் 600 கிமீ தூரம் பயணப்பட்டிருக்கின்றன. யானைகளின் இந்தப் பயணத்தை சர்வதேச ஊடகங்கள் வரை ட்ரோன் அனுப்பிக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த யானைகளில் தற்போது ஒரு ஆண் யானையும் பெண் யானையும் வெளியேறி மீண்டும் காட்டுக்குத் திரும்பிய நிலையில் தற்போது 14 யானைகள் மட்டும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தபடி உள்ளன. இவற்றில் 3 ஆண் யானைகள் 3 இளைய யானைகளும் 3 குட்டி யானைகளும் அடக்கம்.
யானைகள் எதற்காகக் காட்டிலிருந்து வெளியேறின, எதனால் இத்தனை தூரம் பயணப்படுகின்றன என்பது யாருக்கு புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் பயணப்படும் வழியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க கிராமங்களுக்குள் நுழையும் பாதைகளை சீன தீயணைப்புத்துறை ஏற்கெனவே அடைத்துவிட்டது. மக்களை அப்புறப்படுத்தவேண்டிய தேவை உள்ள பகுதிகளிலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் சேட்டை மிகுந்த யானைக்கூட்டம் போகிறபோக்கில் சில விளைநிலங்கள், கார் விற்பனைக்கூடங்கள், முதியோர் தங்கும் இல்லம் என பல இடங்களுக்கு விசிட் அடித்துவிட்டுச் சென்றுள்ளன.
முதியோர் இல்லத்தின் ஒரு அறையில் அமர்ந்திருந்த முதியவரை லைட்டாக தனது துதிக்கையால் இந்த யானைகளில் ஒன்று தொடவும், அவர் பயந்துகொண்டு தனது கட்டிலுக்கு அடியில் மறைந்துகொள்ளும் வீடியோ ஒரு பக்கம் வைரலாகி வருகிறது.
மற்றபடி, மக்களுக்கு இந்த யானைகளால் இதுவரை எந்தவித பாதிப்பு இல்லையென்றாலும் விளைநிலங்களில் அவை ருசித்து சாப்பிட்ட சோளம் கரும்பு என உணவுப்பொருட்கள் சேதம் மட்டும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் இருக்கும் எனக் கணக்கிட்டுள்ளது சீன அரசு. இப்படிப் பயணம் செய்யும் களைப்பு காரணமாகச் சமவெளி ஒன்றில் கூட்டமாக களைப்புடன் படுத்துறங்கும் புகைப்படம் காண்பவர்கள் நெஞ்சை உருகவைப்பதாக உள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
யானைகளை அறிந்த ஆய்வாளர்கள் இவை இப்படி பயணம் செய்வது குறித்து பல்வேறு காரணங்களைக் கணிக்கின்றனர். ‘ஒருவேலை யானைக்கூட்டத்தின் தலைவர் வழிமாறி இருக்கலாம் அதனால் வழி தெரியாமல் மற்ற யானைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன’ என்கிறார்கள் ஒரு சிலர். வேறு சிலர்,’யானைகள் இனப்பெருக்கத்துக்காக வேறு இடம் தேடி நகர்வது கூடக் காரணமாக இருக்கலாம்’ என்கின்றனர். கூட்டத்தை விட்டுப் பிரிந்து சென்ற யானையில் ஒன்று போகும் வழியிலேயே குட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆசிய யானைகள் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நிலையில் தற்போது 300 ஆசிய ரக யானைகள் சீனாவில் இருக்கின்றன. யுனான் மாகாணத்தில் இதுபோன்று யானைகள் வெளியே வருவது இதுமுதல்முறை அல்ல. கடந்த ஒருவருடத்துக்கு முன்பு இதே போல யானைகள் கூட்டம் காட்டிலிருந்து வெளியேறி கிராமங்களின் விளைநிலங்களில் படுத்து உறங்கிய புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.
Also Read:”நான் யார் எனத் தெரிந்துகொண்டேன்” - ஹெச்.ராஜா விமர்சனத்தை ஹேண்டில் செய்த பி.டி.ஆர்