அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெஸோஸ், ப்ளூ ஆரிஜின் என்னும் ராக்கெட் நிறுவனத்தையும் வைத்துள்ளார், அந்த நிறுவனம் 'நியூ ஷெஃப்பர்ட்' என்னும் விண்கலத்தை தயாரித்துள்ளது. இந்த விண்கலத்தில் மனிதர்கள் அமர்ந்து விண்வெளியை சுற்றிப் பார்க்கும் முதல் பயணத்தை அடுத்த மாதம் ஜூலை 20-ஆம் தேதி மேற்கொள்ள ப்ளூ ஒரிஜின் நிறுவனம் முயற்சித்து வருகிறது. அந்த வகையில் விண்கலத்தின் முதல் பயணத்தில் தானும், தனது சகோதரர் மார்க்கும் பயணம் செய்ய இருப்பதாக ஜெஃப் பெஸோஸ் அறிவித்துள்ளார்.






"எனக்கு ஐந்து வயதிலிருந்தே, விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என்று கனவு உண்டு. ஜூலை 20-ஆம் தேதி, நான் எனது சகோதரருடன் அந்த பயணத்தை மேற்கொள்வேன்" என்று பெசோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



இந்த விண்கல பயணம் மொத்தமாக 10 நிமிடங்கள் நீடிக்கும், இதில் நான்கு நிமிடங்கள் கார்மன் கோட்டிற்கு (karman line) மேல் விண்கலம் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்மன் கோடு என்பது பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் உள்ள எல்லையைக் குறிக்கும், அந்த வகையில் பூமியின் வளிமண்டலத்திற்கு மேல் நியூ ஷெஃப்பர்ட் விண்கலம் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ப்ளூ ஆரிஜின் தயாரித்துள்ள இந்த விண்கலம் தற்போது வரை 15 முறை பயணிகள் யாரும் உள்ளே இல்லாமல் சோதனை செய்யப்பட்டுள்ளது. நியூ ஷெஃபர்ட் விண்கலம் 6 பயணிகளுடன் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் பூமியில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரத்திற்கு மேல்வரை பறக்க முடியும். பூமியின் வளிமண்டலத்தில் இருந்து மேலே சென்று விண்வெளியில் வளிமண்டலத்தில் பயணம் செய்யும்போது சில நிமிடங்கள் விண்வெளியில் மிதக்கும் அனுபவத்தை பயணிகள் பெற முடியும். மேலும் பூமியின் வட்ட வடிவை பூமிக்கு வெளியே இருந்து ரசிக்கும் வாய்ப்பும் பயணிகளுக்கு கிடைக்கும். அதன் பிறகு பாராசூட் மூலமாக பூமிக்கு மீண்டும் வந்து சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ட்ரிப் விண்வெளி சென்று வர 1.45 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.