சீனக்கப்பலை அனுமதிக்ககூடாது என இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்த நிலையிலும், சீனாவால் பராமரிக்கப்பட்டு வரும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி சீனாவின் உளவுக்கப்பல் வந்துகொண்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் இந்திய கப்பற்படை மேலும் உஷாராக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் கப்பல்..
சீன நாட்டின் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு கப்பல்தான் 'யுவான் வாங் 5’. யுவான் வாங் 5 என்ற சீனக் கப்பலானது, தேவையான எரிபொருள்களை நிரப்புவதற்கு இலங்கையிடம் அனுமதி கோரி இருந்தது. ஆகஸ்ட் 11 முதல் 17 வரை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்த கப்பல் நிறுத்தப்படும் என்றும் சீனா குறிப்பிட்டிருந்தது. குறிப்பிட்ட அந்த சீனக் கப்பல் மிகவும் திறன் வாய்ந்த, அதிநவீன உதிரிபாகங்களைக் கொண்ட மேம்பட்ட கடற்படைக் கப்பல் என்பதால் இந்த விவகாரம் பேசுபொருளானது. இந்தியாவுக்கு ஒரு வகையில் அச்சுறுத்தல் நாடாக பார்க்கப்படும் சீனாவின் உளவுக்கப்பல் என்பதால் 'யுவான் வாங் 5’ கப்பலை உற்றுநோக்கின இந்திய ஊடகங்கள்.
இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை தரும் என தொடர்ந்து செய்திகள் வெளியாகின .ஊடகங்களின் செய்திகளுக்கு விளக்கம் அளித்த இந்திய அரசு நிலைமையை கண்காணித்து வருவதாக தெரிவித்தது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவில் கப்பலை அனுமதிக்க வேண்டாமென இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்தது. இதனை ஏற்றுக்கொண்ட இலங்கையும், 'இந்த பயணத்தை முன்னெடுக்க வேண்டாம் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் கொழும்பில் உள்ள சீன தூதரகத்திடம் தெரிவித்தது. "யுவான் வாங் 5 கப்பலை ஹம்பாந்தோட்டைக்கு வந்தடையும் தேதியை இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனை நடத்தப்படும் வரை ஒத்திவைக்குமாறு அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது" என ஒரு கடிதத்தையும் இலங்கை அனுப்பியது. இது குறித்து பேசிய இலங்கை அதிபரான ரணில் விக்கிரமசிங்கவும், இந்த சர்ச்சைக்குரிய பயணம் திட்டமிட்டபடி நடக்காது என்று உறுதியளித்திருந்தார்.
தொடர்ந்து முன்னேறும் கப்பல்..
சீனக்கப்பலை அனுமதிக்ககூடாது என இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்த நிலையிலும், சீனாவின் கப்பல் வந்துகொண்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை நிலைமையின்படி வேகத்தை அதிகரித்த யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 600 நாட்டிக்கல்மைல் தூரத்தை அடைந்தது. பின்னர் புதன்கிழமைவாக்கில் வேகத்தை குறைத்த அந்தக்கப்பல் அந்தமான் தீவை நோக்கி பயணத்தை திருப்பியதாக கூறப்பட்டது. திசை மாறியதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் அந்தக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் அழுத்தத்தையும் மீறி சீனாவின் கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நெருங்குவதால் இந்தியா தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
சீன கப்பலால் ஆபத்தா?
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனாவின் கப்பல் வருவதால் இந்தியாவுக்கு ஏதும் பாதிப்பு உண்டா அல்லது இந்த கப்பல் நகர்வு இலங்கைக்கு வைக்கப்பட்ட குறியா என்பதை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அப்போதும் இதே சிக்கல்..
2014ஆம் ஆண்டு இரண்டு சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தபோதும் இதேபோன்றதொரு நிலை ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அந்த இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்ட விவரத்தை இலங்கைக்கோ, இந்தியாவுக்கோ சீனா தெரிவிக்கவே இல்லை. அப்போது சீனா, நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பியதைக் கூட, இலங்கைக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் சீன ஆதிக்கம் ஏன்?
கொழும்பில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் இலங்கையின் தென் பகுதியில் அதிக சிங்களவர்கள் வாழும், ராஜபக்சவினரின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் அமைந்திருக்கிறது இந்த துறைமுகம். இந்த ஹம்பாந்தோட்டை துறைமுகம், அதிக வட்டியுடனான சீன கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துறைமுக நிர்மாணத்திற்காக சீனாவிடம் இருந்து பெற்ற கடனை இலங்கையால் திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இந்த துறைமுகத்தின் மீது சீனாவின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது.