உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. அந்நாட்டின் வளர்ச்சிக்கும், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதாரத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற, சீனாவின் எண்ணத்திற்கும் முக்கிய ஆதாரமாக இருப்பதும் இந்த மக்கள் தொகை தான். ஆனால், குழந்தையை பெற்றுக் கொள்வதில் தற்போது பொதுமக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, சீனாவில் குழந்தை பிறக்கும் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.
60 ஆண்டுகளில் இல்லாத சரிவு:
இந்நிலையில் தான், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன் முறையாக சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது. சீன தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ”சீனாவில் 1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2022 ஆம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் சீன மக்கள் தொகை எண்ணிக்கை 1.41260 பில்லியன் ஆக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் முடிவில் சீனாவின் மக்கள் தொகை 1.41178 பில்லியன் ஆக குறைந்து உள்ளது”.
சீன அரசு தீவிரம்:
ஒரு கட்டத்தில் அதிவேகமாக வளர்ந்த மக்கள் தொகை காரணமாக, குடும்பத்திற்கு ஒரு குழந்தை மட்டுமே எனும் கடுமையான விதியை சீன அரசு கொண்டு வந்தது. இதன் காரணமாக பொருளாதாரத்தில் முதலிடத்தை அடைவதற்கு முன்பே, அதிக வயதானோர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக, 2016 -ம் ஆண்டிலேயே "ஒரு குழந்தை கொள்கையை" சீன அரசு தளர்த்திக் கொண்டதோடு, கடந்த ஆண்டு முதல் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெறவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்து வருகிறது.
இறப்பு விகிதம் அதிகரிப்பு:
இதுதொடர்பான சீன அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 2021 ஆம் ஆண்டில் சீனாவில் 1000 பேருக்கு 7.52 என இருந்த குழந்தை பிறப்பு விகிதம், கடந்த 2022 ஆம் ஆண்டில் 6.77 ஆகக் குறைந்துள்ளது. அதேநேரம், இறப்பு விகிதம், பிறப்பு விகிதத்தைவிட அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இறப்பு விகிதம் 7.37 ஆக உள்ளது. முந்தைய ஆண்டின் சீனாவின் இறப்பு விகிதம் 7.18 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 1976க்குப் பின் அந்நாட்டில் பதிவான இறப்பு விகிதம் இதுவாகும். சீனாவின் மக்கள் தொகையில் தற்போது 60 வயதிற்கும் மேற்பட்டோர் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். இதனால், கடந்த ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் தொடர்ந்தால், சீனாவில் 2035-ம் ஆண்டில் வயதானவர்கள் மட்டும் அதிகளவில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இந்தியா விரைவில் மக்கள் தொகை கணக்கில் சீனாவை முந்திவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு சலுகைகள் அறிவிப்பு:
இதனால் சீனாவின் மாநில அரசுகள் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. வரி விலக்குகள், நீண்ட மகப்பேறு விடுப்பு மற்றும் வீட்டு மானியங்கள் உட்படப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அதிகபட்ச வரம்பை விட 20 சதவீதம் அதிகமாக கடன் வாங்க முடியும் என்று சீனாவின் ஹாங்சோ மாகாணம் அறிவித்துள்ளது. நான்சாங் மற்றும் சாங்ஷா மாகாணங்களும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு சலுகை திட்டங்களை உருவாக்கியுள்ளன. ஆனாலும், இந்த நடவடிக்கைகள் நீண்ட காலப் போக்கை உடனடியாக மாற்றாது என வல்லுனர்கள் கூறுகின்றனர்.