ரியல் லைஃப் மாமாகுட்டியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸாம் அவதாரம் எடுத்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் லவ் டுடே. அதில் இடம்பெற்ற கதாப்பாத்திரங்களான ரெவியும், மாமாகுட்டியும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. திரைப்படத்தில் சில காட்சிகள் தான் அந்த கதாபாத்திரங்கள் வருமென்றாலும் அந்த கதாபாத்திரங்கள் பார்வையாளர்களிடையே ஈசியாக கனெக்ட் ஆனதால் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் வரும் மாமா குட்டியின் ரியல் லைஃப் கதாப்பாத்திரமாகவே பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் கேப்டன் பாபர் அஸாம் மாறியிருப்பதாக கிண்டல் செய்துவருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். பாபர் அஸாமும், அவரது அணியில் உள்ள மற்றொரு வீரரின் காதலியும் உரையாடும் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் வாட்சப் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாபர் அஸாம் பேசுவது போன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் ஆடியோவில், தன்னுடன் தொடர்ந்து பேசினால் அவரது காதலனுக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு வழங்குவதாக பாபர் அஸாம் உறுதியளிப்பதாக இடம்பெற்றுள்ளது. அதேபோல, வீடியோ காலில் அரை நிர்வாணத்தில் பாபர் அஸாம் இருப்பது போன்ற புகைப்படங்களும், காரில் இருப்பது போன்ற வீடியோக்களும் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனினும் இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பற்றிய உண்மைத்தன்மை பற்றி தெரிய வரவில்லை. பலர் இதனை உண்மை என்று கூறி வரும் நிலையில், பாபர் அஸாமின் ரசிகர்கள் அதனை மறுத்து வருகின்றனர். பாபர் அஸாமை பழிவாங்கும் நோக்கில் பரப்பப்படும் விஷம வேலை இது. முடிந்தால் நேரடியாக மோதுங்கள் என்று அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டில் ஹனிட்ராப்பில் சிக்கி வீரர்கள் காணாமல் போவது புதிதல்ல என்றாலும், இந்த பிடியில் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக சிக்கும் இரண்டாவது பிரபல வீரர் ஆகியிருக்கிறார் பாபர் அஸாம். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் கடந்த 2021ம் ஆண்டு ஹனிட்ராப்பில் சிக்கி அவரது வீடியோக்களும் வெளியானது. ஆஷஷ் தொடர் சமீபித்திருந்த நிலையில் அவர் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். அதன் பிறகு அவருக்கு எந்த போட்டியிலும் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் பாபர் அஸாமுக்கே பெண் தொடர்பான பிரச்சனையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. கடந்த 2020ம் ஆண்டு பாபர் அஸாம் மீது குற்றம்சாட்டிய பெண் ஒருவர் பாபர் அஸாம் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கிரிக்கெட்டில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பிருந்தே, சுமார் பத்துவருடங்களுக்கு மேல் பழகி வந்ததாகவும், 2011ல் திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்ததாகவும் பரபரப்பு குற்றாச்சாட்டை முன் வைத்தார். மேலும், திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியபோது திருமணம் செய்துகொள்ளும் இடத்தில் நாம் இல்லை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த பாபர் அஸாம், கிரிக்கெட்டில் பிரபலமான பின் தன்னை தவிர்ப்பதாகவும், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
பாகிஸ்தான் அணியில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்களை வைத்திருக்கும் பாபர் அஸாம் ஏற்கனவே தொடர் தோல்விகளால் சிக்கலில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி, நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வி, போட்டிகளில் சரியான பெர்ஃபார்மன்ஸ் இல்லாதது என்று அவரது கேப்டன் பதவி மீது ஏற்கனவே கத்தி தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது எழுந்துள்ள இந்த சர்ச்சை அதனை மேலும் சிக்கலாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.