அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன ஏற்றுமதிகள் மீது 100 சதவீத வரி விதிக்கும் என்ற தனது அச்சுறுத்தலைத் தொடர்ந்தால், சீனாவும் சில கடுமையா நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.

Continues below advertisement

அரிய தாதுக்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் தனது முடிவை சீனா வலுவாக ஆதரித்துள்ளது. இது “உலக அமைதியைப் பாதுகாப்பதற்கான சட்டபூர்வமான நடவடிக்கை” என்றும், அமெரிக்கா தொடர்ந்து மிரட்டும் வர்த்தகக் கொள்கைகளை முன்னெடுத்தால் “உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று சீனா எச்சரித்துள்ளது.

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகள்

சீனா வியாழக்கிழமை அறிவித்த புதிய உத்தரவு படி, அரிய மண் தாதுக்கள், லித்தியம் பேட்டரிகள், மற்றும் அவை சார்ந்த பொருட்களின் சுரங்கம், செயலாக்கம் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பங்களின் ஏற்றுமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக அமலுக்கு வரும் இந்த உத்தரவு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கும் பொருந்தும்.

Continues below advertisement

பெய்ஜிங் தெரிவித்ததாவது, சில வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து கிடைக்கும் இந்த பொருட்களை இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாக சந்தேகமுள்ளது. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

டிரம்ப் மிரட்டல் – வர்த்தகப் போர் மீண்டும் வெடிக்குமா?

சீனாவின் இந்த முடிவுக்கு பதிலாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் 1 முதல் சீனப் பொருட்களுக்கு 100 சதவீத வரிகள் விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார். இதன் மூலம் உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான வர்த்தகப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

“நாங்கள் வர்த்தகப் போரை விரும்பவில்லை, ஆனால் பயமில்லை” – சீனா

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பதிலளித்த சீன வர்த்தக அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை அமெரிக்கா மிகைப்படுத்துகிறது. வேண்டுமென்றே அதிக வரிகளை விதிப்பது சீனாவுடன் ஈடுபடுவதற்கான சரியான வழி அல்ல,” என்று தெரிவித்துள்ளது.

அதுடன், “சீனா வர்த்தகப் போரை விரும்பவில்லை, ஆனால் அதைப் பற்றி பயமில்லை. அமெரிக்கா தொடர்ந்து தவறான பாதையில் சென்றால், நாங்கள் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்,” எனக் கூறியுள்ளது.

இந்த கடுமையான பதில்கள், சீனா–அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகள் மீண்டும் மோசமடையக்கூடும் என்ற அச்சத்தை உலகளவில் எழுப்பியுள்ளன.