நவீன உலகில் ஸ்மார்ட்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் இன்றி எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. இந்தியாவில் 60 கோடி பேரும் சீனாவின் 100 கோடிக்கும் மேற்பட்டோரும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருவதாக தரவுகள் கூறுகிறது.
ஸ்மார்ட்போனால் ஏற்படும் உளவியல் சிக்கல்:
தொழில்நுட்பத்தால் எந்தளவுக்கு நன்மைகள் கிடைக்கிறதோ, அதே அளவுக்கு தீமைகளும் உண்டாகின்றது. அதேபோலதான், ஸ்மார்ட்போனாலும் பல தீமைகள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது, குழந்தைகள் மீது அது ஏற்படுத்தும் தாக்கம். உளவியல் ரீதியாக பல சிக்கல்களை விளைவிக்கிறது.
எனவே, ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என உளவியல் நிபுணர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக, பெற்றோர்கள், இந்த விவகாரத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதித்த சீனா:
இந்த நிலையில், ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக குழந்தைகள், ஸ்மார்ட்போனை பயன்படுத்தாதவாறு கட்டுப்பாடு விதிக்க சீனா திட்டமிட்டு வருகிறது. இம்மாதிரியான கட்டுபாட்டை அமல்படுத்த மொபைல் நிறுவனங்கள் அனைத்தும், 'மைனர் மோட்' என்ற வசதியை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.
இது தொடர்பான வரைவு, பொது மக்களின் கருத்து கேட்புக்கு விடப்பட்டுள்ளது. இதற்கு, செப்டம்பர் 2ஆம் தேதி வரையில், கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சீன அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் எதிர்பார்த்தபடியே ஏற்று கொள்ளப்பட்டால், ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் முதல் நாடு என்ற பெயரை சீனா பெறும்.
ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்:
சீன அரசு முன்மொழிந்துள்ள வழிகாட்டுதல்கள் ஐந்து வெவ்வேறு வயதினருக்கான கட்டுப்பாடுகளை பரிந்துரைக்கின்றன. அதன்படி, 3 வயதுக்கு குறைவான குழந்தைகள், 3லிருந்து 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 8லிருந்து 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 12லிருந்து 16 வயதுக்குட்பட்ட சிறார்கள், 16லிருந்து 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் என ஐந்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில், 3 லிருந்து 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 3 வயதுக்குட்பட்டவர்கள், குழந்தைகளுக்கான பாடல்களயும் கல்வி மற்றும் பெற்றோர்-குழந்தை தொடர்பான நிகழ்ச்சியை காணொளியாக கேட்க மட்டுமே பரிந்துரைக்கபட்டுள்ளனர்.
16லிருந்து 18 வயதுக்குட்பட்ட சிறார்கள், 'மைனர் மோட்'இன் கீழ் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும். அதேபோல, இரவு 10 மணி முதல் காலை 6 மணி முதல் இணையத்தை பயன்படுத்த முடியாது. இந்த வழிகாட்டுதல்கள் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து தெளிவாக விளக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்கள் மத்தியில் ஸ்மார்ட்போன் மோகம் அதிகரித்ததால் சீனா அரசு, இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது.