காஷ்மீர் விவகாரத்தில் இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. சுதந்திரம் பெற்றதிலிருந்து, காஷ்மீரை சொந்தம் கொண்டாடி வரும் பாகிஸ்தான், ஐநா உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் இந்த விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி வருகிறது. அதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.


காஷ்மீர் விவகாரம்:


நிலைமை இப்படியிருக்க, காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது அதற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக இரண்டாவது முறையாக அமைத்த பின் திரும்ப பெறப்பட்டது. இதன்மூலம், ஜம்மு காஷ்மீர், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.


இந்த விவகாரம் இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் சிக்கலை உருவாக்கியது. இதற்கிடையே, ஜி20 தலைமை பதவியை இந்தியா ஏற்றுள்ள நிலையில், சுற்றுலா மாநாடு, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெறுகிறது. நாளை மறுநாள் தொடங்கி 24ஆம் தேதி வரை, சுற்றுலா மாநாட்டை இந்தியா நடத்துகிறது.


இதற்காக, காஷ்மீர் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து, முதல்முறையாக சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நிகழ்வு ஒன்று காஷ்மீரில் நடைபெறுவது இதுவே முதல்முறை. இதன் காரணமாக, சர்வதேச கவனம் அனைத்தும் காஷ்மீர் பக்கம் திரும்பியுள்ளது.


பிரச்சாரம் செய்த பாகிஸ்தான்:


சுற்றுலா மாநாடு, காஷ்மீரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்தே, பாகிஸ்தான் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.   காஷ்மீரில் நடைபெறும் ஜி20 மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து பரப்புரை செய்து வருவதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.


இந்நிலையில், காஷ்மீரில் ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பேசுகையில், "சர்ச்சைக்குரிய பகுதிகளில் எந்த வடிவத்திலும் ஜி20 கூட்டங்களை நடத்துவதை சீனா உறுதியாக எதிர்க்கிறது. அதுபோன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளாது" என்றார்.


பின்வாங்கும் உலக நாடுகள்:


இதற்கு பதிலடி அளித்துள்ள இந்தியா, "ஜி20 கூட்டத்தை எங்கள் எல்லைப்பகுதியில் எங்கு வேண்டுமானாலும் நடத்த சுதந்திரம் இருக்கிறது.
சீனாவுடனான இயல்பான உறவுகளுக்கு எல்லையில் அமைதி நிலவுவது அவசியம்" என தெரிவித்துள்ளது.


ஸ்ரீநகரில் நடைபெறும் கூட்டத்தில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த 60 பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விலகி இருக்க துருக்கி முடிவு செய்துள்ளது. சவுதி அரேபியா இதுவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்யவில்லை.


பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு பகுதியாக கடற்படை கமாண்டோக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் (என்எஸ்ஜி) ஸ்ரீநகரில் நிறுத்தப்பட்டுள்ளனர். மார்கோஸ் என்று அழைக்கப்படும் கடற்படையினர், G20 கூட்டம் நடைபெறும் ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தைச் (SKICC) தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.