சீன வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்து நாடு முழுவதும் பரவி வருகிறது.


அரசு விதித்துள்ள கடுமையான கொரோனா ஊரடங்குக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வந்த நிலையில், தற்போது அது தீவிரமடைந்துள்ளது.


சீனா முழுவதும் 12 பல்கலைக்கழகங்களுக்கு இந்த போராட்டம் பரவி உள்ளது. சமீபத்தில், உரும்கி நகரில் குடியிருப்பு வளாகம் ஒன்றில் நடந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.


கடும் ஊரடங்கு விதிகள் காரணமாக தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் இதன் விளைவாகவே உயிரிழப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.


போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாள்களாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதன் காரணமாக, கடும் ஊரடங்கு விதிகள் பின்பற்றப்பட்டு வருகிறது.


சீனாவில் நேற்று மட்டும் 39,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருந்தொற்று பரவ தொடங்கிய காலத்திலிருந்து பதிவாகும் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். 


சனிக்கிழமை இரவு,  உரும்கி நகரில் உள்ள சாலையில் மக்கள் கூடி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


ஊரடங்கு மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


போராட்டத்தில், சீன அதிபர் ஷி ஜின்பிங், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் மக்கள் கோஷங்களை எழுப்பினர். நேற்று இரவு, பெய்ஜிங்கில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 






சிலர், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். எங்களுக்கு கொரோனா சோதனை வேண்டாம் என்றும் சுதந்திரமே வேண்டும் என்றும் சிலர் கோஷம் எழுப்பினர்.


சீன தலைநகரின் மத்தியல் அமைந்துள்ள லியாங்மா ஆற்றின் அருகே போராட்டம் நடந்த பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, போராட்டம் குறித்து சமூகவலைதளங்களில் பரவும் செய்திகளை தணிக்கை சீன அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில், அதிகாரிகள் அந்த இடத்தை விட்டு மக்களை நகர்த்த முயன்றபோது, ​​காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.


அதன் தொடர்ச்சியாக, போராட்டத்திற்கு நடுவே, சீன அதிபர் ஷி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என மக்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.