China Accident : சீனாவில் பிரபல உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து சுமார் 31 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் இன்சுவான் நகரில் பிரபல பார்பிக்யூ என்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு அதிகாலை 8.30 மணியளவில் பலத்த சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்ததாக தெரிகிறது. இங்கு பாரம்பரியமாக டிராகன் படகு திருவிழா நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் அங்கு ஏராளமான மக்கள் தெருக்களில் கூடியிருந்தனர். இதனை அடுத்து, அங்கு அருகில் இருந்த உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதனால் உணவகம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். உடனே இதனை அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். உணவகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனை அடுத்து, இந்த விபத்தில் சுமார் 31 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் படுகாயடைந்ததில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களை போலீசார் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விபத்தின் சத்தத்தை சுமார் 50 மீட்டர் தூரத்திலேயே உணர்ந்ததாகவும், உணவகத்தை சேர்ந்த பணியாளர் ஒருவர் சுருண்டு விழுந்ததையும் நேரில் பார்த்ததாக பெண் ஒருவர் கூறியுள்ளார். சுமார் 102 பேர் அந்த இடத்தில் இருந்து மீட்பு குழுவினரால் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து ஏற்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, உணவகத்தில் ஊழியர்கள் கேஸ் வாசனை வெளியேறுவதை கண்டறிந்துள்ளனர்.
அப்போது சோதித்து பார்த்ததில் கேஸ் நிரப்பப்பட்டுள்ள டேங்க் லேசாக உடைந்திருப்பதை அறிந்தனர். உடனே அதன் வால்வை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தான், இந்த கோர விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கோர விபத்தில் சுமார் 31 பேர் உயிரிழந்தது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க