துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு உலகின் பல பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் அடிக்கடி உணரப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லி – என்.சி.ஆர். பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலையில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் தாக்கமே இந்த அதிர்வுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.






இந்த நில அதிர்வின் மையம் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலையில் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில்  உள்ள குல்மர்க் மாவட்டத்தில் இருந்து 418 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் இந்த நில அதிர்வின் மையம் ஏற்பட்டுள்ளது.






இந்த நில அதிர்வால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ, சேதங்களோ ஏற்படவில்லை. முன்னதாக, இன்று காலை ஜம்மு – காஷ்மீரில் உள்ள குல்மர்கில் நில அதிர்வு ஏற்பட்டது. நாட்டின் தலைநகரான டெல்லியில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த பீதியில் உறைந்தனர். இதனால், பலரும் தங்கள் வீடுகளை விட்டு சாலைகளில் அச்சம் காரணமாக நிற்கத் தொடங்கினர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.