இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் சுனாமியை விட அச்சத்தை ஏற்படுத்திய ஒரு வார்த்தை கொரோனா. கொரோனா தொற்று காரணமாக இந்த ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் அவதிப்பட்டு வந்த உலகம் தற்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளது. முதன்முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது.


40 ஆயிரத்தை தொட்ட கொரோனா:


கொரோனாவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக சீனா இருந்து வந்த நிலையில், சீனாவிலும் இயல்பு வாழ்க்கை மீண்டு வந்தது. இந்த நிலையில், சமீப நாட்களாக சீனாவில் கொரோனா வைரசின் பாதிப்பு மீண்டும் ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரசை காட்டிலும் அதன் காரணமாக பல நாடுகளும் விதித்த ஊரடங்கால் மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டனர்.


 






சீனாவிலும் கொரோனாவை காட்டிலும் ஊரடங்கு காரணமாக மக்கள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்தனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பால் சீன மக்கள் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சீனாவின் இன்றைய நிலவரப்படி தினசரி கொரோனா பாதிப்பு சுமார் 39 ஆயிரத்து 452 ஆக பதிவாகியுள்ளது. அதாவது, தினசரி 40 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


வலுக்கும் போராட்டம்:


சீன அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் சாலைகளில் இறங்கி போராடி வருகின்றனர். ஷாங்காயில் போலீசுக்கு எதிராக மக்கள் போராடி வந்த நிலையில், பிஜீங் நகரத்திலும் மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குவாங்டங், செங்ஷோ, லாசா உள்ளிட்ட பல பகுதிகளிலும் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்பதுடன், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்றும் பதாகைகளை ஏந்தி போராடி வருகின்றனர்.






மேலும், சீனாவின் வடகிழக்கில் உள்ள உரும்கி நகரில் ஒரு கட்டிடத்தில் நடைபெற்ற தீ விபத்தில் 10 பேர் பேர் உயிரிழந்ததற்கு கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே காரணம் என்று சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், சீனாவின் அதிகாரிகள் இந்த தகவலை மறுத்துள்ளனர். தற்போது, சீனாவின் பெரு நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்தும், இந்த மோசமான சூழலுக்கு பொறுப்பேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.


தினசரி 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மக்களும் அதிபருக்கு எதிராக போராடி வருவதால் நாடு முழுவதும் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.