இந்த ஃபிஃபா உலக கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணிகளை அனுபவம் இல்லாத அணிகள் தோற்கடித்து அதிர்ச்சி அளிப்பது தொடர்கதையாகி வருகிறது.


குரூப் ‘எஃப்’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியை மொராக்கோ அணி எதிர்கொண்டது. இந்த போட்டி அல்-துமானா மைதானத்தில் நடைபெற்றது.


கடந்த 2018 உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது இடமும், ஃபிஃபா சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திலும் உள்ள பெல்ஜியம் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், மொராக்கோ அணியுடனான போட்டியில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த போட்டியின் இரண்டாவது பாதியில் மொராக்கோ அணி வீரர் ரோமெய்ன் சாஸ், 73ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.


கூடுதல் நேரத்தின் 2ஆவது நிமிடத்தில் சக்காரியா மேலும் ஒரு கோல் போட மொராக்கோ அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இது, பெல்ஜியம் அணி ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது.


 






இதை தொடர்ந்து, பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் கூடியிருந்த மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். கால்பந்து ரசிகர்களின் தாக்குதலுக்கு போலீசார் ஆளானது கலவரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகையை காவல்துறை பிரயோகம் செய்தனர்.


நகரின் மையத்தில் அமைந்துள்ள சில பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு குடியிருப்பாளர்கள் எச்சரிக்கப்பட்ட நிலையில், சுமார் நூறு போலீஸ் அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டனர்.


வன்முறை பரவுவதைக் கட்டுப்படுத்த மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டன. 12க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் இல்சே வான் டி கீரே கூறுகையில், "சுமார் 7 மணி அமைதி திரும்பியது. ஆனால், கலவரம் நடந்த பகுதிகளில் காவல்துறை தொடர் ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெடி பொருள்களை பயன்படுத்தி நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.


மேலும், பட்டாசு வெடித்ததில் ஒரு பத்திரிகையாளரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்தக் காரணங்களுக்காகவே போராட்டத்தை அடக்க நீர் பீரங்கி மற்றும் கண்ணீர்ப்புகை ஆகியவை பயன்படுத்தப்பட்டது" என்றார்.