கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடி கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.


அறிவியல் உலகின் தொடர் முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அது கட்டுப்பாட்டில் வரவழைக்கப்பட்டது.


கொரோனா எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இருந்தபோதிலும், பல மாதங்களாக சீனாவில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இதை தொடர்ந்து, மக்கள் போராட்டத்திற்கு பிறகு பூஜ்ய கொரோனா கட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டது. 


சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வழிவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. 


அடுத்த 90 நாள்களில், சீனாவில் 60 சதவிகிதத்தினரும் உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும் என தொற்றுநோயியல் மருத்துவரும் சுகாதார பொருளாதார நிபுணருமான எரிக் ஃபீகல்-டிங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.


லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்றும் அவர் கூறியிருந்தார். சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கை கொரோனா உலுக்கி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை புதைப்பதற்காக பயன்படுத்தப்படும் சுடுகாடுகளில் இறந்த உடல்கள் அதிகளவில் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டு வருகிறது.


பல இடங்களில் இறந்த உடல்கள் கிட்டத்தட்ட வெள்ளம் போல காட்சி அளித்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில், ஜனவரி 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் 13,000 பேர் சீனாவில் கொரோனா காரணமாக உயிரிழந்ததாக உயர்மட்ட சுகாதாரத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல, சீனாவின் பெரும்பான்மையான மக்கள் தொகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.


ஜனவரி 12ஆம் தேதி வரையில், மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 60,000 பேர் உயிரிழந்ததாக சீனா அதிகாரப்பூர்வமாக கடந்த வாரம் தெரிவித்திருந்தது.  ஆனால், இந்த அதிகாரப்பூர்வ தரவுகளில் உண்மை இல்லை, அதை விட அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என விமர்சிக்கப்பட்டது.


சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 681 நோயாளிகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுவாசக் கோளாறால் இறந்துள்ளனர். மேலும் 11,977 பேர் தொற்றுநோயின் இணை நோய்களால் இறந்துள்ளனர்" 


 






கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவை பொறுத்தவரையில், கொரோனாவை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தபட்டுள்ளது.