கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் தனது உலகளாவிய பணியாளர்களில் 12, 000 பேர் அல்லது 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக கடந்த வாரம் அறிவித்தது. கூகுள் நிறுவன வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்நிலையில், ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஏன் என்பது குறித்து, அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார்.
சுந்தர் பிச்சை விளக்கம்:
கூகுள் நிறுவன தலைமை மற்றும் போர்ட் உறுப்பினர்கள் உடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகே, இந்த முடிவை எட்டியதாக, திங்கட்கிழமை அன்று ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ”நீங்கள் தெளிவாகவும் தீர்க்கமாகவும், முன்கூட்டியே செயல்படவில்லை என்றால், நாங்கள் சிக்கலை மேலும் மேலும் மோசமாக்கலாம். இவை நான் எடுக்க வேண்டிய முடிவுகள். பணிநீக்கம் என்பது திடீரென செய்யப்படவில்லை. கவனமாக பரிசீலித்த பின்னரே மேற்கொள்ளப்பட்டது. நிறுவனத்தின் தலைமைத்துவம் கூட இந்த ஆண்டு அவர்களின் வருடாந்திர போனஸில் குறிப்பிடத்தக்க சரிவை சந்திக்கும், நிறுவனத்தை சரியான பாதையில் கொண்டு செல்லவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார்.
ஆல்பாபெட் நிறுவனத்திற்கு ஆலோசனை:
இதனிடையே, இங்கிலாந்தின் பெரும் பணக்காரரும், முன்னணி நிதி நிறுவன மேலாளருமான, கிறிஸ்டோபர் ஹான் ஆல்பாபெட் நிறுவனத்திற்கு ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். சுந்தர் பிச்சைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”ஆல்பாபெட் நிறுவனத்தின் செலவினத்தை குறைக்க நீங்கள் எடுத்துள்ள முடிவுகள் ஊக்கமளிக்கின்றன. 12,000 வேலைகளை குறைப்பதற்கான முடிவு சரியான திசையின் ஒரு நடவடிக்கையாகும். ஆனால் இது 2022 இன் மிகவும் வலுவான எண்ணிக்கையிலான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை இது மாற்றாது.”
1.5 லட்சம் பேரை பணிநீக்கம் செய்ய பரிந்துரை:
”இதன் காரணமாக ஆல்பபெட் நிர்வாகம் மேலும் ஆட்குறைப்பு நடவடிக்கையை தீவிரமாக்க வேண்டும். சுமார் 1,50,000 பணியாளர்களின் எண்ணிக்கை, அதாவது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் ஆல்பாபெட்டின் நிறுவனத்தில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஈடாகும் வகையில் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதற்கு, நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 20 சதவிகிதம் குறைக்க வேண்டும். ஊழியர்களுக்கு வழங்கும் இழப்பீட்டு தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றும் கிறிஸ்டோபர் ஹான் வலியுறுத்தியுள்ளார்.
ஊழியர்கள் கடும் அதிருப்தி:
பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆல்பாபெட் நிறுவன ஊழியர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில், கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், மேலும் ஒன்றரை லட்சம் பேரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என, ஆல்பாபெட் நிறுவனத்திற்கு கிறிஸ்டோபர் ஹான் அறிவுரை வழங்கி இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரை விமர்சித்து சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.