செயற்கைக்கோளில் சிக்கிய சீன அணு ஏவுகணைக் கிடங்குகளின் புகைப்படங்கள் பரபரப்பையும் பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.


சீனா அமெரிக்காவைவிட ஐரோப்பிய யூனியன் நாடுகளைவிட பொருளாதாரத்தில் விஞ்சி நிற்கும் சூழலுக்கு தன்னை தகுதிப்படுத்தி வருகிறது.


அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ள நிலையில், தற்போது எல்லை விரிவாக்கத்தில் சீன ராணுவ கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கொடுப்பதற்காகவே, பாகிஸ்தான், இலங்கை போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.


இலங்கையில் சீனா கடல் பகுதியில் தனது கண்காணிப்பை அதிகரிப்பதாலேயே தூத்துக்குடியில் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை இந்திய அரசு களமிறக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், சீனா தனது ராணுவ பராக்கிரமத்தைப் பறைசாற்றுவது போல் அணு ஏவுகணைக் கிடங்கு ஒன்றை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் செயற்கைக்கோள் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகியிருக்கிறது. 


பிளானட் லேப் என்ற நிறுவனம் இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளாது. பிளானட் லேப் என்ற நிறுவனம் செயற்கைக்கோள் உதவியுடன் உலக நாடுகளின் ராணுவ பலங்களை இதுபோல் புகைப்படங்கள் மூலம் அம்பலப்படுத்தி டாலர் கணக்கில் லாபத்தைக் குவித்து வருகிறது. அந்த வகையில், சீனாவின் யூமென் மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அணு ஆயுதக் கிடங்குகள் இருப்பதாக புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.


இது சர்வதேச அளவில் பரபரப்பான பேசு பொருளாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு இது சவால் விடுக்கும் செய்தியாக அமைந்துள்ளது.  ஆனால், இந்தக் கிடங்கு உலகை ஏமாற்றும் சீனாவின் உத்தி என்றும் சர்வதேச ராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர்.




இந்திய சீன எல்லை சர்ச்சை:


இந்திய - சீன எல்லையின் நீளம் 3,488 கிலோ மீட்டர். இந்த எல்லை நெடுகிலும் சர்ச்சைக்கு குறைவில்லை. மேற்கே லடாக்கை ஒட்டியுள்ள அக்சை-சின் பகுதியை இந்தியா கோருகிறது. கிழக்கே அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதியைச் சீனா கோருகிறது.


1993-ல் ஒரு தற்காலிக ஏற்பாடு உருவானது. அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் அவரவர் பொறுப்பில் நீடிக்கும். இதைப் பிரிக்கும் கோடு, ‘நடப்புக் கட்டுப்பாட்டுக் கோடு’ (Line of Actual Control- LAC) எனப்பட்டது. 


இந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை சுற்றிலு எப்போதுமே சர்ச்சை எழும். கடந்த 2020 ஜூன் 15 அன்று கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த கைகலப்பை மறக்க முடியாது.  சீனா தொடர்ந்து பான்காங் ஏரி, கோக்ரா ஊற்று, தெப்சாங் சமவெளி முதலிய இடங்களிலும் எல்லை தாண்டியது.


ஏப்ரல் 2020-க்கு முந்தைய நிலைக்கு சீனப் படைகள் திரும்ப வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இந்நிலையில், அணு ஆயுதக் கிடங்குகள் கொண்ட செயற்கைக் கோள் புகைப்படம் சீன ராணுவத்தின் பலப் பிரகடனமா இல்லை இந்தியா போன்ற அண்டை நாடுகளை ஏமாற்றும் செயலா என்ற கேள்வி  எழாமல் இல்லை.