உலகின் முன்னணி பணக்காரர்களில் முதன்மையானவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.


ட்விட்டர்:


சமீபத்தில்தான், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்க்கிற்கும் போடப்பட்டது. இதையடுத்து, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக வாங்கி தன்வசப்படுத்தினார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதுமே ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அக்ரவால் உள்பட அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கினார். மேலும், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். 


உயர் அதிகாரிகள் மட்டுமல்லாமல், பணியாளர்களையும் பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த பணிநீக்கம் ட்விட்டர் பங்குகளை நிறுவனத்தின் பணியாளர்கள் வாங்க தவிர்க்கவே என கூறப்பட்டது. ஆனால், செலவுகளை குறைக்கவே பணி நீக்கம் செய்யப்படுவதாக மஸ்க் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


50 சதவீத பணியாளர்கள் நீக்கம்


இதைத்தொடர்ந்தும், பணிநீக்கம் செய்யப்படாதவர்களுக்கு அதிக பணி சுமை கொடுக்கப்பட்டு வருகிறது. மஸ்க் நிர்ணயித்த காலக்கெடுவைச் சந்திக்க ட்விட்டரில் உள்ள பொறியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம், வாரத்தில் ஏழு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 


பொறியாளர்களுக்கு நவம்பர் தொடக்கத்தில் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அதை பூர்த்தி செய்யத் தவறினால், அவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும் கூறப்பட்டு வந்தது. ஏற்கனவே, 50 சதவிகித பணியாளர்கள், அதாவது 7,500 ஊழியர்கள், ட்விட்டர் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல ஊழியர்களை பணியிலிருந்து நீக்க ட்விட்டர் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


விரைவில் அறிவிப்பு:


மஸ்கின் காலக்கெடுவை பூர்த்தி செய்யாத காரணத்தால் பல ஊழியர்கள் நீக்கப்பட்டிருப்பது நிறுவனத்தில் செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையில், "புதிய ஆட்குறைப்பு நடவடிக்கையில் விற்பனை பிரிவு மற்றும் ட்விட்டரின் கூட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்த அடுத்த அறிவிப்பு நாளையே வெளியாகலாம். அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சம்மதிக்குமாறு விற்பனை மற்றும் கூட்டு நிறுவனங்களின் துறைகளின் தலைவர்களிடம் மஸ்க் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு தலைவர் ராபின் வீலர், அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார். கூட்டு நிறுவனங்களின் துறை தலைவரான மேகி சுனிவிக்கும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மறுத்துவிட்டார். இதன் காரணமாக, இருவரும் தங்கள் பணியை இழந்துள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


1200 பேர் ராஜினாமா:


மஸ்க்கின் எச்சரிக்கைக்குப் பிறகு கிட்டத்தட்ட 1,200 ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால், திங்கள் வரை தங்கள் அலுவலகங்களை மூட வேண்டிய கட்டாயம் ட்விட்டருக்கு ஏற்பட்டது. ட்விட்டரில் வீட்டில் இருந்து பணிபுரியும் முறையும் திரும்பபெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.