அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஐ கடந்து பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் ஹவாயின் மவுய் நகரில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காட்டுத்தீ மளமளவென பரவியது. ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதில், லகேனா நகரத்தின் பெரும் பகுதி குடியிருப்புகள் எரிந்து சாம்பலாயின. தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் படையினர், ராணுவ வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிபத்தால் 2,200 குடியிருப்புகள் எரிந்து சாம்பலான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், செல்போன் கோபுரங்கள், கடைகள் உள்ளிட்டவை தீக்கிரையாகி சாம்பலானது. தற்போது வரை சேத மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவல் இன்னும் குறையாத நிலையில் சேத மதிப்பு அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த தீயில் சிக்கி 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், இந்த எண்ணிக்கை கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீயின் தீவிரம் அதிகமாக இருப்பதால் மீட்பு பணிகள் கடினமாக உள்ளதாக மீட்பு படை வீரர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி காட்டுத்தீயினால் 1000 த்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீட்பு பணிகளுக்காக அமெரிக்காவிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் ஆகியவை உதவிக்காக வரவழைக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர் அடிப்படை தேவைகளை பெரும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. ஆள் பற்றாக்குறை காரணமாக அமெரிக்காவில் இருந்து ராணுவ வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஹவாய் தீவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்றுள்ளார். அங்கு இருக்கு நிலமை குறித்து நேரில் சென்று பார்வையிடுவதற்காக சென்றுள்ளார். இதற்கு முன் அதிபர் ஜோ பைடன் கூறுகையில், “ இதுவரை அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இது மிகவும் மோசமான ஒன்று. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மீட்பு பணிகளை பார்வையிடும் வகையில் நான் அங்கு கூடிய விரைவில் செல்ல உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.