கோதுமை ஏற்றுமதி குறித்து பேசுவதற்காக மொராக்கோ, டுனீசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், துருக்கி, அல்ஜீரியா, லெபனான் ஆகிய 9 நாடுகளுக்கு இந்தியா தனது பிரதிநிதிகளை அனுப்புகிறது.


இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா 2022-23 நிதியாண்டில் 10 மில்லிய டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இலக்காக நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுவதும் கோதுமைக்கான தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியா கோதுமை ஏற்றுமதியை விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளது.


2021-22 காலகட்டத்தில் இந்தியா 7 மெட்ரிக் டன் அளவில் கோதுமை ஏற்றுமதி செய்தது. அதாவது 2.05 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கோதுமை ஏற்றுமதி செய்தது. இதில் 50% கோதுமையை வங்கதேசம் மட்டுமே வாங்கியுள்ளது. எகிப்து நாடு இந்தியாவிடமிருந்து 6.1 மெட்ரிக் டன் கோதுமையை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது.
இந்நிலையில் கோதுமை ஏற்றுமதியை ஊக்குவிக்க Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளார்ச்சிக் கழகம் சார்பில் ஒரு செயற்குழுவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.


இந்திய கோதுமைக்கு உலகளவில் நல்ல வரவேற்பு இருப்பதால் விவசாயிகள், வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள் கோதுமை உற்பத்தி, வணிகம், ஏற்றுமதிக்கான தரக் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
கோதுமை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் பஞ்சாப், ஹரியானா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகள், ஏற்றுமதியாளர்களுக்கு தரக்கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்துவது என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 




கோதுமை ஏற்றுமதியில் உலக நாடுகள்:


உலகில் கோதுமை ஏற்றுமதி செய்யும் முதல் 5 நாடுகளில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஏற்றுமதியில் முப்பது சதவீதம் ரஷ்யா மற்றும் யுக்ரேனில் இருந்து வருகிறது. ரஷ்யாவின் கோதுமையில் பாதியை எகிப்து, துருக்கி மற்றும் வங்கதேசம் வாங்குகின்றன. உலகின் இரண்டு பெரிய கோதுமை ஏற்றுமதி நாடுகள் போரில் சிக்கியுள்ளன, எனவே அவற்றின் வாடிக்கை நாடுகளில் கோதுமை விநியோகம் தடைபட்டுள்ளது.


இதனால், இந்தியாவின் கோதுமை மீது உலகின் பார்வை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் கோதுமை ஏற்றுமதி குறித்து பேசுவதற்காக மொராக்கோ, டுனீசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், துருக்கி, அல்ஜீரியா, லெபனான் ஆகிய 9 நாடுகளுக்கு இந்தியா தனது பிரதிநிதிகளை அனுப்பிவைக்க உள்ளது.