இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு அழகானதோ, அதே அளவுக்கு விசித்திரமானது. அவ்வபோது, இந்தப் பிரபஞ்சத்தில் நிகழும் அழகான மாற்றங்களை நாம் பூமியில் இருந்து பார்வையிட முடியும். அது சில நேரங்களில் கிரகணங்களாக இருக்கலாம். எரிகல் பொழிவாகவும் இருக்கலாம். இந்த 2022ஆம் ஆண்டு, நாம் பூமியில் இருந்து காணக்கூடிய விண் நிகழ்ச்சிகளின் பட்டியலை இங்கே வழங்கியுள்ளோம்.. 


சூரிய கிரகணம்: அக்டோபர் 25, 2022


தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் கடந்த ஏப்ரல் 30 அன்று பாதி அளவிலான சூரிய கிரகணம் தெரிந்திருந்த நிலையில், இந்த ஆண்டு வரும் அக்டோபர் 25 அன்று மற்றொரு சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. இதனை ஐரோப்பா, வடகிழக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, இந்திய உள்பட ஆசிய நாடுகள் ஆகியவற்றில் காண முடியும். 


சந்திர கிரகணம்: நவம்பர் 08, 2022


கடந்த மே 16 அன்று ஏற்பட்ட முழுச் சந்திர கிரகணம் மட்டுமின்றி, இந்த ஆண்டில் வரும் நவம்பர் 8 அன்று மற்றொரு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. எனினும், ஏற்கனவே நிகழ்ந்த சந்திர கிரகணத்தைப் போலவே இதையும் இந்தியாவில் இருந்து காண முடியாது. 



2022ஆம் ஆண்டில் ஏற்படவுள்ள எரிகல் பொழிவு நிகழ்வுகள்:


சூரிய கிரகணங்கள், சந்திர கிரகணங்கள் ஆகியவற்றை விட எரிகல் பொழிவு நிகழ்வுகள் பெரும்பாலும் அதிக எண்ணிக்கையில் ஏற்படுபவை. எனினும், எரிகல் பொழிவுகளைப் பார்க்க வேண்டும் என்றால், நகரங்களில் இருந்து முதலில் வெளியேற வேண்டும். வெளிச்சங்களால் ஏற்படும் மாசுக்களில் இருந்து நீங்கி, நகரங்களுக்கு வெளியில் செல்லும் போது, எரிகல் பொழிவைப் பார்த்து ரசிக்கலாம். 


பெர்செய்ட்ஸ் எரிகல் பொழிவு:


ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் மிக வெளிச்சமான எரிகல் பொழிவுகளுள் ஒன்று இது. வழக்கமான ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 24 வரை நிகழும் இந்த எரிகல் பொழிவு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 09 முதல் 13 வரை அதன் உச்சத்தைத் தொடுகின்றன. ஸ்விஃப்ட் டட்டுள் என்கிற எரிகல்லின் மிச்சங்களில் இருந்து பெர்செய்ட்ஸ் எரிகல் பொழிவு உருவாகிறது. வரும் ஆகஸ்ட் 12, 13 ஆகிய நாள்களின் போது, பெர்செய்ட்ஸ் எரிகல் பொழிவு உச்சத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


டிராகோனிட்ஸ் எரிகல் பொழிவு:


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 6 முதல் 10 வரை டினாகோனிட் எரிகல் பொழிவு நிகழ்கிறது. வரும் அக்டோபர் 8, 9 ஆகிய தேதிகளில் உச்சநிலையை அடையும் இந்த எரிகல் பொழிவின் போது, ஆய்வாளர்களால் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 10 எரிகல்களைக் காண முடியும் எனக் கூறப்படுகிறது. 



ஆரியோனிட்ஸ் எரிகல் பொழிவு:


அக்டோபர் மாதம் நிகழும் இரண்டாவது பெரிய எரிகல் பொழிவு நிகழ்வாகக் காணப்படும் இது, அக்டோபர் 2 முதல் நவம்பர் 7 வரை நிகழ்கிறது. இதன் உச்சம் வரும் அக்டோபர் 21, 22 வரை நிகழ்வதாகக் கூறப்படுகிறது. ஹேலி எரிகல்லின் மிச்சங்களில் இருந்து உருவாகும் இந்தப் பொழிவின் போது, ஒரு மணி நேரத்தில் சுமார் 20 எரிகற்களை வானில் காண முடியும். 


பிற எரிகல் பொழிவு நிகழ்வுகள்:


நவம்பர் 6 முதல் நவம்பர் 20 வரை ஏற்படும் லியோனிட்ஸ் எரிகல் பொழிவு, டிசம்பர் 4 முதல் டிசம்பர் 20 வரை ஏற்படும் ஜிமினிட்ஸ் எரிகல் பொழிவு ஆகியவற்றின் போதும், வானில் எரிகல் பொழிவுகளைக் கண்டு ரசிக்கலாம்.