சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் பூனைகளை செல்லப் பிராணிகளாக மாற்றியதில் இருந்து பூனைகளின் மூளையின் அளவு கணிசமாக சுருங்கியுள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வுகள் பாலூட்டிகளைச் செல்லப் பிராணிகளாக மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தகவல்களை அளிக்கிறது.
காட்டில் வாழும் உயிரினங்களோடு ஒப்பிடுகையில், வீட்டில் பழக்கப்படுத்தப்பட்ட பாலூட்டி விலங்குகளின் மூளையின் அளவு குறைந்திருப்பதை வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ரஃபேலா லெஷ் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், வீட்டில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளுக்கும், காட்டு விலங்குகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் ஒப்பீடுகளில், வீட்டில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் அவற்றின் உண்மையான முன்னோரைப் போல இல்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜனவரி 26 அன்று, ராயல் சொசைட்டி ஓபன் சைன்ஸ் என்ற ஆய்வு இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், ஆய்வாளர்கள் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளின் தலையின் அளவை, 1960களிலும், 1970களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட காட்டுப் பூனைகள், செல்லப் பூனைகள் ஆகியவற்றோடு ஒப்பிட்டுள்ளனர்.
வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளுக்கும், ஐரோப்பிய காட்டுப் பூனைகளுக்கும், ஆப்பிரிக்க காட்டுப் பூனைகளுக்கும் இடையிலான மண்டை ஓட்டின் அளவு வேறுபாட்டை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இந்த ஆய்வில், வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளுக்கு சிறியளவிலான மண்டை ஓடு இருப்பதாகவும், இதன்மூலம் அதன் மூளையின் அளவு ஐரோப்பியக் காட்டுப் பூனைகள், ஆப்பிரிக்க காட்டுப் பூனைகள் ஆகியவற்றின் மூளையின் அளவை விட குறைந்ததாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மேலும், வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளுக்கும், ஐரோப்பியக் காட்டுப் பூனைகளுக்கும் இடையிலான கலப்பில் பிறக்கும் பூனைகளின் மண்டை ஓட்டின் அளவு நடுத்தர அளவில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
பூனைகளை வீட்டில் செல்லப் பிராணிகளாக மாற்றியதால், மூளையில் பயத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் செல்களின் உற்பத்தி குறைந்திருப்பதாகவும், அது காலப்போக்கில் அதன் மண்டை ஓட்டையும், மூளையின் அளவையும் குறைப்பதற்குக் காரணமாக அமைந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பூனைகள் குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்வது, வீட்டில் செல்லப் பிராணிகளாகப் பூனைகளை மாற்றியதால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளைப் புரிந்துகொள்ள முடியும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
`காட்டுப் பூனைகள் பற்றியும், வீட்டுப் பூனைகள் பற்றியும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் எளிதில் கிடைப்பதில்லை. பழைய ஆய்வுகளை மீண்டும் பயன்படுத்தி, இந்தத் துறையை மேலும் பெருக்குவதற்காக நாங்கள் அனைத்து விதமான முயற்சிகளையும் இதனுள் செலுத்தியிருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார் ஆய்வாளர் ரஃபேலா லெஷ்.
தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வுகளில் பழைய ஆய்வுகளை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்வதோடு, பூனைகள் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் அனைத்தையும் குறித்து ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.