இங்கிலாந்தில் 99 வயது மூதாட்டி ஒருவர் அவரது பராமரிப்பாளாராலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவர் பாதிக்கப்பட்டது குடும்பத்தினருக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பராமரிப்பாளர் பிலிப் கேரி புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். முதாட்டியின் நடத்தை மாறியதை குடும்பத்தினர் கவனித்தனர். இதையடுத்து ஞாபக மறதியால் பாதிக்கப்பட்ட அவரது அறையில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டது. இந்தக் கேமிராவில் பிலிப் கேரி சிக்கியுள்ளார்.


அந்த மூதாட்டி டிமென்ஷியா என்னும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர். அவர் பிளாக்பூல் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்தார். இதற்கிடையே அவரது உறவினர்கள் அவரை பார்க்க வந்தபோது அவரது நடத்தையில் வித்தியாசம் தெரிந்துள்ளது. அவர்களை என்னைத் தொடவிடாதீர்கள். என்னை காயப்படுத்துவார்கள் எனக் கூறியுள்ளார். இதனால் அவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். 


இதை அடுத்து கேமிராவை அவரது அறையில் ரகசியமாக வைத்து கண்காணித்துள்ளனர் உறவினர்கள். அதில் பராமரிப்பாளரான 48 வயது கேரி மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்வது பதிவாகியுள்ளது. இதையடுத்து காவல்துறை அவரைக் கைது செய்தது. அவர் முன்பு தடயவியல் ஆதாரங்கள் மற்றும் கேமிரா ஆதாரங்கள் வைக்கப்பட்டதை அடுத்து அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதற்காக அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு தீர்பளிக்கப்பட்டது. இதன்படி அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையில் இருப்பார். 


பாதிக்கப்பட்ட மூதாட்டியின் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் வயதான உறவினர், நாங்கள் நம்பிய பராமரிப்பாளராலேயே சித்திரவதை செய்யப்பட்டு கவனித்துக் கொள்வதில் பயங்கரமான பல சோதனைகளைச் சந்தித்துள்ளார். அவருடைய நடத்தை மாறியதை நாங்கள் கவனித்தோம், அவர் எங்களிடமிருந்து பின்வாங்கினார், எங்களை கட்டிப்பிடிக்கத் தயங்கினார். முத்தமிடமாட்டார், நாங்கள் போகும் போது நாங்கள் செல்வதை அவர் விரும்பவில்லை. மேலும் ஓரிரு சந்தர்ப்பங்களில் அவர் எங்களை கவலையடையச் செய்யும் விஷயங்களைச் சொன்னாள்.இதையடுத்து யாரோ அவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள் எனத் தெரிய வந்தது. அதன்பிறகுதான் கேமரா பொருத்தி கண்காணித்தோம். ஆனால் பராமரிப்பாளரே இதைச் செய்வார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் குடும்பத்தினருக்கு இது மிகவும் வேதனை அளிப்பதாக இருந்தது” என அவர்கள் கூறியுள்ளனர்.


இதுகுறித்து கருத்து கூறியுள்ள காவல்துறை “கேரி மிகவும் இழிவான முறையில் தனது பொறுப்பை துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவர் மீதான நம்பிக்கை இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளனர்..


அவரது குற்றத்தின் தீவிரத்தை உணர்ந்து தரப்பட்ட தண்டனையை நாங்கள் வரவேற்கிறோம் மேலும் விசாரணைக் காலம் முழுவதும்  மற்றும் நீதிமன்ற வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட காலத்திலும் கண்ணியத்தோடும் வலிமையோடும் பொறுப்புணர்வோடும் நடந்துகொண்ட அவரது குடும்பத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.” எனக் கூறியுள்ளனர்.