பிரிட்டிஷ் நாட்டில் போர்ன் தளங்களைப் பயன்படுத்துபவர்கள் 18 வயதைக் கடந்தவர்களா என்பதை அறிய க்ரெடிட் கார்ட், பாஸ்போர்ட் முதலான தகவல்களை வழங்குவது குறித்த திட்டத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.


ஆன்லைன் பாதுகாப்பு மசோதா என்றழைக்கப்படும் இந்தச் சட்ட மசோதாவில் கமர்சியல் போர்ன் தளங்கள் மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒன்லீஃபேன்ஸ் முதலான பயனாளர்களால் உருவாக்கப்படும் போர்ன் தளங்களுக்கும் இந்தச் சட்ட மசோதா பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. 


இணையத்துறை அமைச்சர் க்றிஸ் ஃபிலிப் இதுகுறித்து கூறிய போது, `ஒரு குழந்தை பார்க்க கூடாதவற்றைப் பார்க்காமல் இருப்பதில் இருந்து பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளும் மன அமைதி என்பது அனைத்து பெற்றோர்களும் விரும்பும் ஒன்று. குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடமாக இணையத்தை மாற்றுவதற்கான பணிகளை இதன்மூலம் பலப்படுத்தி வருகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 



2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது கன்செர்வேடிவ் கட்சியினர் இணையத்தில் போர்ன் பார்ப்பதற்கு வயது பரிசோதனை செய்வதை முன்வைத்திருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், சட்ட சிக்கல்கள் காரணமாகவும், தனிநபர் உரிமையை ஆதரிக்கும் எதிர்ப்பாளர்களால் காரணமாகவும் பிரிட்டிஷ் அரசு இந்தத் திட்டத்தைக் கைவிட்டது. 


மேலும், போர்ன் தளங்கள் பயனாளர்களிடம் இருந்து பெறும் வயது சார்ந்த தகவல்களைப் பாதுகாப்பதன் மூலம் தனியுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என பிரிட்டிஷ் அரசு கூறியுள்ளது. எனினும், இந்தப் புதிய சட்டத்திற்கான தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை போர்ன் தளங்களுக்கு வழங்கப்பட்டாலும், வயதைப் பரிசோதனை செய்யும் தொழில்நுட்பங்களை பிரிட்டிஷ் நாட்டின் இணையக் கட்டுப்பாட்டாளர் ஆஃப்காம் பரிந்துரை செய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. 


பிரிட்டிஷ் நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் ஒருவருக்கும் மேல் ஆன்லைன் தளங்களில் போர்ன் படங்களைப் பார்ப்பதாக அந்நாட்டின் வயது பரிசோதனை தொழில்நுட்பங்கள் துறையைச் சேர்ந்த பெரு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. 



தனியுரிமைக்கு ஆதரவான பிரச்சாரகர்கள் பலரும் போர்ன் தளங்களில் தனி விவரங்களை அளிப்பதன் மூலமாக, தனிநபர்களின் போர்ன் பார்வையிடும் பழக்க வழக்கங்களை இந்த நிறுவனங்கள் எளிதில் கைப்பற்றி விடலாம் எனக் கூறுகின்றனர். 


ஓபன் ரைட்ஸ் க்ரூப் என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜிம் கில்லாக், `இந்தச் சட்டத்தின் மூலம் தனிநபர்களைக் கண்காணிப்பதும், அவர்களது போர்ன் பார்க்கும் வழக்கத்தை வைத்து மதிப்பிடுவது குறித்தும் எதுவும் சொல்லப்படவில்லை. எனவே தனிநபர் உரிமை குறித்தும், பாதுகாப்பு குறித்தும் சில தவறுகள் நிகழ்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார். 


இந்தச் சட்டத்தைப் பின்பற்றாத போர்ன் நிறுவனங்களின் மொத்த வருவாயில் 10 சதவிகித தொகையை அபராதமாக விதிப்பது, பிரிட்டிஷ் இணையத் தள சேவை நிறுவனங்களால் குறிப்பிட்ட தளங்களைத் தடை செய்வது முதலான தண்டனைகள் அளிக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.