மான்களை குறிவைத்து தாக்கும் அரியவகை (ஜோம்பி) Zombie நோய் கனடாவின் இரு மாகாணங்களில் ஏற்பட்டு மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது. கனடா நாட்டில் மான்களை தாக்கும் அரியவகை நோய் ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. க்ரானிக் வேஸ்டிங் டிசீஸ் (CWD - Chronic Wasting Disease) என்று இந்த நோய்க்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த நோய் அந்நாட்டின் அல்பெர்டா மற்றும் சஸ்காட்செவான் ஆகிய மாகாணங்களில் பரவிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நோய் தொற்று கட்டுப்பாடு மையத்தின் கூற்றின்படி, இந்த CWD நோய் பாதிப்பு மான் மற்றும் அதன் இனங்களில் ஏற்படும் எனவும், இந்த நோய்க்கு சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ செலுத்தவில்லை என்றால் நோய் பாதிப்பு அதிகமாகி, விலங்கு உயிரிழக்கும் அபாயம் அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது.



மேலும் இந்நோய் பாதிப்புக்குள்ளான மான்களை இறைச்சியாக உண்ணும் பட்சத்தில், இந்த தொற்று மனிதர்களுக்கும் பரவும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக மான்களை வேட்டையாடும் வேட்டைக்காரர்களுக்கு இந்த நோய் பாதிக்கும் அபாயம் அதிக அளவில் உள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. அதேவேளை இந்த நோய் மனிதர்களை நிச்சயம் பாதிக்கும் என்பதற்கான எந்த தரவுகளும் இதுவரை உறுதியாக இல்லை என நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் நோய் அறிகுறியுடன் தென்படும் எந்த மான் இனத்தையும் வேட்டையாட வேண்டாம் என கனடா நாட்டு சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


CWD நோய் ஏற்பட்ட விலங்கு தனது சுயக் கட்டுப்பாட்டை இழந்து மூளை பாதிப்புடன் இயங்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி இயங்கும் பட்சத்தில் மூளை ஒரு நிலையாக இல்லாமல் காட்டுத்தனமாக செயல்பட வைத்து, அசபாவிதங்கள் செய்ய தூண்டுமாம். இதனால் இந்த நோய்க்கு Zombie வியாதி எனவும் பொதுப்பெயர் வைத்துள்ளனர். CWD வியாதி உள்ள விலங்குகளிடம் உமிழ் நீர் சுரப்பு அதிகம் காணப்படும், விசித்திர செயல்பாடுகளில் ஈடுபடும், சிறுநீர் வெளியேற்றம் அதீதமாக இருக்கும், உடல் எடை குறையும் என அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளனர். உமிழ்நீர், சிறுநீர் மூலமும் இந்த தொற்று பரவும் அபாயம் உள்ளது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் மக்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக கூறுகிறார்கள். இதன் வரலாறு என்னவென்றால், 1960ஆம் ஆண்டு அமெரிக்காவில் இந்த தொற்று நோய் முதல்முதலாக கண்டறியப்பட்டுள்ளது. அந்நாட்டின் கொரோலாடோ, நெர்மெஸ்கா, கனாஸ் உள்ளிட்ட 26 மாகாணங்களில் இந்த தொற்று இதுவரை ஏற்பட்டுள்ளது. இந்த CWD நோய் கனடாவில் 1996 ஆம் ஆண்டு முதல்முதலாக ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.