தமிழ்நாட்டு மீனவர்கள் ஜாமீன் பெற வேண்டுமென்றால் ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவால் சிறையில் வாடும்  மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கடந்த மார்ச் 24ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களின் விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து முழங்காவில் முகாமில் வைத்து விசாரணை நடத்தினர். 


இந்த நிலையில், சிறைக்காவல் முடிந்து 12 மீனவர்களும் மீண்டும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, தமிழ்நாடு மீனவர்கள் ஜாமீனில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடி செலுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. நபர் ஒருவருக்கு 1 கோடி ரூபாய் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் மீனவர்களை மே 12ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை கேட்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


 






முன்னதாக, கடந்த 4ஆம் தேதி தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேரை விரைந்து மீட்க நடவடிக்கை வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர்  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.


இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். மார்ச் 29-ஆம் தேதி முதல் நேற்று வரையிலான 5 நாட்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களையும் சேர்த்து இந்த வாரத்தில் மட்டும் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தொடர் கைதுகளை அனுமதிக்கக்கூடாது. மீனவர் சிக்கலுக்கு தீர்வு காண அண்மையில் இரு நாட்டு கூட்டு பணிக்குழுக்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் மீனவர்கள் மீது கடுமை காட்டக்கூடாது என இந்தியா கூறிய பிறகும் கைது தொடர்வது நியாயமல்ல. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் பதிவிட்டிருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண