Canada PM Mark Carney: இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநரான மார்க் கார்னி, ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பதிலாக 86% வாக்குகளைப் பெற்று கனடாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் புதிய பிரதமர் அறிவிப்பு:

கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோவை மாற்றுவதற்கான போட்டியில் இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி வெற்றி பெற்றுள்ளார். 59 வயதான இவர், முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்டை தோற்கடித்து 86% வாக்குகளைப் பெற்று, 152,000 கட்சி உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று வாகை சூடியுள்ளார். ட்ரூடோவின் ராஜினாமாவுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. லிபரல் கட்சித் தலைவர் சச்சித் மெஹ்ரா, லிபரல் தலைமைப் போட்டியில் கார்னியின் வெற்றியை அறிவித்தார்.

பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமா?

பொருளாதார மேலாண்மை மற்றும் உலகளாவிய நிதித்துறையில் கார்னிக்கு விரிவான அனுபவம் உள்ளது. எனவே நாட்டின் பொருளாதாரா வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரூடோ சுமார் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகு பதவி விலகுவதாக அறிவித்தார். பொதுமக்களிடையே அவரது செல்வாக்கு சரிந்ததால், ஆளும் லிபரல் கட்சி அவரை மாற்றுவதற்கான போட்டியை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ALSO READ: IND vs NZ Final: சாம்பியன்ஸ் ட்ராபி - பேட்டிங், பவுலிங்கில் அசத்திய வீரர்கள் - யார் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை?

ட்ரம்பை தாக்கி பேசிய கார்னி:

பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து பேசிய கார்னி, நமது பொருளாதாரத்தை பலவீனப்படுத்த முயற்சியில் ஒருவர் இருக்கிறார். டொனால்ட் டிரம்ப், நமக்குத் தெரிந்தபடி, நாம் கட்டுவது, விற்பனை செய்வது என நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பதற்கு நியாயமற்ற வரிகளை விதித்துள்ளார். அவர் கனடா குடும்பங்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைத் தாக்குகிறார். நாங்கள் அவரை வெற்றிபெற விட முடியாது. நாங்கள் அவரை வெற்றிபெற விடமாட்டோம். அமெரிக்கர்கள் எங்களுக்கு மரியாதை காட்டும் வரை கனடா பழிவாங்கும் வரிகளை நடைமுறையில் வைத்திருக்கும்" என தெரிவித்ததாக AP செய்தி வெளியிட்டுள்ளது.

அனுபவம் வாய்ந்த தலைவர்

கனடாவின் பிரதமராக பதவியேற்ற முதல் அரசியல் பின்னணி இல்லாத வெளிநாட்டவர் என்ற பெருமையை கார்னி பெற்றுள்ளார். முன்னதாக, கனடா வங்கி மற்றும் இங்கிலாந்து வங்கி இரண்டின் ஆளுநராகப் பணியாற்றிய முதல் நபர் என்ற தனது அனுபவத்தை அவர் முக்கியத்துவம் வாய்ந்ததாக குறிப்பிட்டு வருகிறார். தனது அனுபவம் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தன்னை மிகவும் பொருத்தமானவராக ஆக்குகிறது என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார். 

தனது பரப்புரையின் போது, ​​அமெரிக்காவிற்கு எதிரான பழிவாங்கும் வரிகள் கொள்கையையும், முதலீட்டை அதிகரிப்பதற்கான ஒருங்கிணைந்த உத்தியையும் கார்னி ஆதரித்தார். ட்ரூடோவின் கீழ் கனடாவின் பொருளாதார வளர்ச்சியை அவர் விமர்சித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த மார்க் கார்னி?

  • கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் உள்ள ஃபோர்ட் ஸ்மித்தில் பிறந்த மார்க் கார்னி, அலெப்ர்டாவின் எட்மண்டனில் வளர்ந்தார். அவர் ஹார்வர்டில் பொருளாதாரம் பயின்றார்,  ஆக்ஸ்போர்டில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
  • கார்னி 2008 முதல் 2013 வரை கனடா வங்கியையும், அதைத் தொடர்ந்து 2013 முதல் 2020 வரை இங்கிலாந்து வங்கியையும் வழிநடத்தினார். இது நிதி நெருக்கடிகளின் போது நிலையான தலைமைத்துவத்திற்கான நற்பெயரை வழங்கியது. 1694 இல் நிறுவப்பட்டதிலிருந்து இங்கிலாந்து வங்கியை நடத்திய முதல் பிரிட்டிஷ் அல்லாதவர் இவர்
  • கார்னி முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் நிர்வாகியாகவும் இருந்துள்ளார். 2003 இல் கனடா வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு லண்டன், நியூயார்க், டோக்கியோ மற்றும் டொராண்டோவில் பணியாற்றினார்.
  • 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்து வங்கியிலிருந்து விலகிய பிறகு, கார்னி, காலநிலை நடவடிக்கை மற்றும் நிதிக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதராகப் பணியாற்றினார். அவரது விரிவான அனுபவம் இருந்தபோதிலும், அவர் ஒருபோதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியை வகித்ததில்லை அல்லது பாராளுமன்றத்தில் பணியாற்றியதில்லை.
  • அவரது மனைவியின் பெயர் டயானா, அவர் பிரிட்டனில் பிறந்தவர், அவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.
  • வரும் நாட்களில், ட்ரூடோவும் கார்னியும் கனடாவின் கவர்னர் ஜெனரல் மேரி சைமனை சந்திப்பார்கள், அவர் நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை லிபரல் தலைவரிடம் ஒப்படைப்பார்.