டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்க வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பிரத்யேக விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் மாற்று  விமானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஜி20 மாநாடு:


இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. இதில், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும், 20 அழைப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். மாநாடு முடிந்து பெரும்பாலான தலைவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். ஆனால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மட்டும் இன்னும் நாடு திரும்ப முடியாமல் டெல்லியிலேயே தங்கி உள்ளார்.


விமானத்தில் கோளாறு:


ஜி20 மாநாட்டை முடித்துக்கொண்டு கடந்த 10ம் தேதி மாலையே கனடா திரும்புவதற்கு புறப்பட்டார் ஜஸ்டின் ட்ரூடோ. திட்டப்படி, விமானம் இரவு 8 மணிக்கு புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதுதொடர்பாக கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், கனடா பிரதமர் செல்ல வேண்டிய சிஎப்சி 001 விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை ஒரே நாள் இரவில் சரிசெய்துவிட முடியாது என்பதால், மாற்று ஏற்பாடு வரும் வரையில் கனடா பிரதமர் அடங்கிய தங்களது குழு இந்தியாவில் இருப்பார்கள்: என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாற்று விமானம்:


இந்நிலையில் கனடா பிரதமரை தாயகம் அழைத்துச் செல்வதற்காக மாற்று விமானம் இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளது. அதோடு, இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ள விமானத்தை சரிசெய்வதற்கான  தேவையான உதிரிபாகங்களும் அனுப்பப்பட்டுள்ளன. அவை இந்தியா வந்தடைந்ததும் மாற்று விமானத்திலோ அல்லது ஏற்கனவே டெல்லியில் உள்ள விமானத்தின் கோளாறு செய்யப்பட்ட பிறகோ, கனடா பிரதமர் தனது பயணத்தை தொடங்குவார் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்று மாலைக்கு மேல் ட்ரூடோ தனது கனடா புறப்படுவார் என கூறப்படுகிறது.


ட்ரூடோவும், இந்திய பயணமும்:


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்த இரண்டு பயணங்களும் மிக மோசமாகவே முடிவடைந்துள்ளன. கடந்த 2018ம் ஆண்டு அவர் இந்தியா வந்திருந்தபோது, கனடாவில் வைத்து இந்திய அரசியல்வாதி ஒருவரை கொல்ல முயன்ற வழக்கில் குற்றவாளி என அழைக்கப்பட்ட ஒருவர், அரசு விருந்தினர் பட்டியலில் இடம்பெற்றது சர்ச்சையாக மாறியது. இருநாடுகளின் ராஜாங்க உறவில் பிரச்னையாகவும் வெடித்தது. இந்நிலையில் தான், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக ஜி20 மாநாடு முடிந்து இரண்டு நாட்கள் ஆன பிறகும் கூட ட்ரூடோ தாயகம் திரும்ப முடியாமல் டெல்லியிலேயே தங்கியுள்ளார்.


கனடாவை விமர்சித்த மோடி:


முன்னதாக ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “கனடாவில் தீவிரவாத சக்திகளின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுவதாக” காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்பாக பகிரங்கமாக விமர்சித்திருந்தார். இதனால், இருநாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் கூட ஈடுபடவில்லை.