கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியது. கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக கனட நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வைத்த குற்றச்சாட்டு உலக நாடுகளை கதிகலங்க வைத்தது.


நிஜ்ஜார் கொலை சம்பவம்:


ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கனட விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமெரிக்க தெரிவித்திருந்தது.


இந்த நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டதற்கு காரணமான இருவர் விரைவில் கைது செய்யப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது. அவர்களை பிடிக்க கனட காவல்துறை முனைப்பு காட்டி வருகிறது. இது தொடர்பாக தி குளோப் மற்றும் மெயில் வெளியிட்ட செய்தியில், "சந்தேகத்திற்கு உள்ளானவர்கள் காவல்துறையின் சந்தேக வளையத்தில் உள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


சந்தேக வளையத்தில் இருவர்?


கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுபவர்கள், இன்னும் கனடாவில்தான் உள்ளனர் என்றும் கனடாவை விட்டு வெளியேறவில்லை என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்தவர்கள் தொடர்பான தகவல்களும் அவர்களுக்கும் இந்திய அரசுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் கனடா காவல்துறை விரைவில் தகவல் வெளியிடும் கூறப்படுகிறது.


நிஜ்ஜார் கொலை  விவகாரம், உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, கனடாவுக்கான இந்திய தூதர் ஒருவரை அந்நாடு கனடாவை விட்டு வெளியேற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் கனடாவின் தூதர் ஒருவரை வெளியேற்றியது. இதனால், இரு நாட்டு உறவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்கனவே இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள நிலையில், மற்றொரு சீக்கிய தீவிரவாதியை கொல்ல இந்தியா திட்டமிட்டதாகவும் இதை அமெரிக்க தடுத்து நிறுத்தியதாக வெளியாகியுள்ள செய்தி உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்தியாவுக்கு குடைச்சல் தந்து வரும் சீக்கிய தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொல்ல திட்டமிடப்பட்டதாகவும் அந்த முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாகவும் புகழ்பெற்ற பைனான்சியல் டைம்ஸ் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.