Fiona hurricane :  கனடா நாடு தங்கள் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிலான தீவிரமான புயலை எதிர்கொள்ள தயாராகிறது கிழக்கு கனடா பகுதி. கரீபியன் பகுதிகளை தாக்கி நிலை குலைய வைத்த ஒரே வாரத்திலேயே பியோனா என பெயரிடப்பட்ட சூறாவளி நோவா ஸ்கோடியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.


 






பியோனா புயல் காரணமாக அதிக காற்று, புயல் மற்றும் அதிக மழைப்பொழிவு பெய்யும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இது வெள்ளிக்கிழமை இரவு நிலை 3 வகை சூறாவளியாக இருந்து பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது அட்லாண்டிக் கனடா வழியாக நகர்ந்து வரும் நிலையில், முழு சூறாவளியாகவே நீடித்து வருகிறது. 


படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், புயல் குறித்து தகவல்களை பெறுவதற்காகவும் அரசின் அவசர கால நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும் தனது பயணத்தை தாமதப்படுத்தியுள்ளார்.


வெள்ளிக்கிழமை இரவு காற்றின் வேகம் 105 மைல் (165 கிமீ) எட்டிய நிலையில், 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு, மத்திய நோவா ஸ்கோடியா மற்றும் நியூஃபவுண்ட்லாந்தின் சில பகுதிகளுக்கு சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என அமெரிக்க புயம் மையம் தெரிவித்துள்ளது.


சனிக்கிழமை காலை கிழக்கு நோவா ஸ்கோடியாவில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனால், மழை மற்றும் காற்று வெள்ளிக்கிழமை இரவே தொடங்கியது. இதுகுறித்து கனட சூறாவளி மைய வானிலை ஆய்வாளர் இயன் ஹப்பார்ட் கூறுகையில், "புயலின் மையம் ஒன்றுதான். ஆனால், பலத்த காற்று வீசும் மிகப் பெரிய பரப்பளவில் மழை பெய்ய உள்ளது.


புயலின் மையத்திலிருந்து பலவேறு இடங்கள் இன்னும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படப் போகிறது. வெள்ளிக்கிழமை இரவு நோவா ஸ்கோடியாவின் கிழக்குக் கரையை 10 மீட்டர் (33 அடி) உயரத்தில் அலைகள் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும். கரடுமுரடான கடல் அலை தாக்கும்" என்றார்.


கனட அதிகாரிகள் நோவா ஸ்கோடியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் அவசர எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளனர். கடற்கரையோரங்களில் கடுமையான வெள்ளம் மற்றும் மிகவும் ஆபத்தான அலைகள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.