கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பூட்டானில் சர்வதேச சுற்றுலாவாசிகளுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


 






நிலையான மேம்பாட்டு கட்டணம் என்ற பெயரில் திருத்தப்பட்ட சுற்றுலா கட்டணத்துடன் மீண்டும் எல்லைகள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் வசூலித்து வந்த 65 டாலர்களில் இருந்து தனது நிலையான மேம்பாட்டுக் கட்டணத்தை ஒரு இரவுக்கு ஒரு பார்வையாளருக்கு 200 டாலராக உயர்த்தியதியுள்ளது பூட்டான்.


தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பு இந்தியர்களிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. ஆனால், அவர்கள் இப்போது 1200 ரூபாய் செலுத்த வேண்டும் என்று விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய சுற்றுலா பயணிகளுக்கான திருத்தப்பட்ட கட்டணம் ஒருபோதும் அமல்படுத்தப்படவில்லை.


கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், பூட்டான் அதன் முதல் கொரோனா பாதிப்பை கண்டறிந்த பிறகு, சுற்றுலாவாசிகளுக்கு அதன் எல்லைகளை மூடியது. பூட்டானை பொறுத்தவரை, சுற்றுலாத்துறை அதன் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. 


பூட்டானின் மொத்த மக்கள் தொகை 8 லட்சமே ஆகும். இதில், 61,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக, அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதையடுத்து, அங்கு ஏழ்மை அதிகரித்தது.


 






தனியார் தொலைக்காட்சிக்கு இதுகுறித்து பூட்டான் தூதர் ஜிக்மே தின்லே நம்க்யால் அளித்த பேட்டியில், "நிலையான பயன்பாட்டை உறுதி செய்வதற்கும் பூட்டானில் துடிப்பான, பாரபட்சமற்ற, உள்ளடக்கிய, அதிக மதிப்புள்ள சுற்றுலாத் துறைக்கான சூழலை உருவாக்குவதற்கும் பூட்டான் அரசு சுற்றுலாக் கொள்கையை மறு உத்தியாக்கியுள்ளது.


சுற்றுலா என்பது ஒரு தேசிய சொத்து. நாங்கள் நடுநிலையாக இருக்க முயற்சிக்கிறோம். அதற்கு என தனித்த மதிப்பு உள்ளது. எங்கள் சுற்றுலாவை நிலையானதாக மாற்றுவதற்கு நாங்கள் எங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறோம். நாங்கள் இந்த வரியை விதிப்பதற்கு இதுவே முக்கிய காரணம்" என்றார்.