Canada India: காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக கனட அரசாங்கம் மீது இந்தியா தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. இந்திய உளவுத்துறை அதிகாரிகள், தங்கள் நாட்டில் புகுந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக கனட அரசு பதில் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.


இந்திய கனட உறவில் மேலும் விரிசல்:


இப்படிப்பட்ட சூழலில், கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருப்பதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்தாண்டு தெரிவித்தது சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை இந்தியா முற்றிலுமாக நிராகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே, இந்திய - கனட உறவு சுமூகமாக இல்லாத நிலையில், நிஜ்ஜார் கொலை சம்பவம் இரு நாட்டு உறவில் மேலும் விரிசலை உண்டாக்கியது.


இச்சூழலில், இந்திய அரசு மீது கனடா மீண்டும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இந்தியா மட்டும் இன்றி பாகிஸ்தான் மீதும் சரமாரி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. கனட நாட்டு தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட்டதாக கனடா தெரிவித்துள்ளது.


கனட தேர்தலில் இந்திய உளவுத்துறை தலையீடா?


கனட தேர்தலில் வெளிநாட்டு தலையீடு இருந்ததாக அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2019 மற்றும் 2021 தேர்தல்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட்டு தங்களுக்கு சாதகமான வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க முயற்சித்ததாக கனட உளவுத்துறை தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக கனட பாதுகாப்பு புலனாய்வு சேவை (CSIS) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கனட தேர்தலை தங்களுக்கு சாதமாக மாற்ற இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டு சேர்ந்து வேலை பார்த்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவு அல்லது காலிஸ்தான் இயக்கத்தின் மீது அனுதாபம் கொண்டதாக நம்பப்படும் இந்திய வம்சாவளியினர் வாழும் மாவட்டங்களை குறி வைத்து 2021 கனட தேர்தலில் இந்திய உளவுத்துறை வேலை செய்ததாக கூறப்படுகிறது.


தங்களுக்கு சாதகமாக வேட்பாளர்களுக்கு சட்டவிரோதமாக நிதி உதவி அளித்து தேர்தலை அவர்களை வெற்றி பெற வைக்க முயற்சி நடந்துள்ளது. அதேபோல, கடந்த 2019ஆம் ஆண்டு, கனட அரசியலில் பாகிஸ்தான் நலன் சார்ந்தவர்களை வெற்றி பெற வைக்க ரகசியமாக முயற்சி நடந்ததாக சொல்லப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்றும் இந்தியாவின் உள்விவகாரங்களில் கனட அரசு தலையிடுவதாக பதில் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. மற்ற நாட்டு தேர்தலில் தலையிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடந்த பிப்ரவரி மாதமே விளக்கம் அளித்திருந்தார்.


இதையும் படிக்க: தேர்தலை தங்களுக்கு சாதகமாக மாற்ற சீனா சதி! இந்திய வாக்காளர்களை AI மூலம் குழப்ப முயற்சி - பகீர் ரிப்போர்ட்