உலகளவில் பரவி வரும் ’h5n1’ பறவைக்காயச்சல் கொரோனா பெருந்தொற்றைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


உலகின் பல்வேறு நாடுகளில் ’H5N1’ வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு புதிய தகவல்களை வெளிட்டு வருகின்றனர். அதன்படி,  டெய்லி மெயில் (Daily Mail) வெளியிட்ட அறிக்கையின்படி, பறவைக்காய்ச்சலின் H5N1 ரக வைரஸ் கொரோனா வைரஸை விட தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்த்ம் என்று எச்சரித்துள்ளனர். இந்த வைரஸ் பரவுவதும் வேகமாகி வருகிறது என்று தெரிவித்துள்ளனர். இதை ‘பெருந்தொற்று’ என்று அறிவிக்கும் அளவுக்கும் நிலமை மோசமாகலாம் என்பதாலும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அண்டார்டிக் பகுதியில் ஏராளமான பென்குயின்கள், ஜார்ஜியா கடற்கரையில் ’black Skuna’ பறவைகள் இறந்து கிடந்தன. இவை ‘HPAI' வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பண்ணைத் தொழிலாளி ஒருவர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ’H5N1’ வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நோய் தொற்றின் தீவிரத்தை குறைக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


பசு, பூனை ஆகியவைகளும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன தெரிய வந்துள்ளது. இதனால், நிபுணர்கள் இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வைரஸ் அதிக வேகமாக உருமாற்றம் அடையும் தன்மை கொண்டிருப்பதால் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 


கடந்த 2003-ம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், ’H5N1’ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சராசரி 52% ஆக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், கொரோனா தொற்றால் உயிழந்தவர்களின் சராசரி இதைவிட குறைவாக இருப்பதையும் குறிப்பிட்டுள்ளது. 


2020-ல் இருந்து ’H5N1 பறவைக் காய்ச்சலால் 30 சதவீதம் நபர்கள் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் தகவல் தெரிவிக்கிறது. 


பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்கவும் அதற்கான முன்னேற்பாடுகளை செய்யவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது. 


 பயோநயாகரா மருந்து தயாரிப்புத் துறை ஆலோசகர் ஜான் ஃபுல்டன் தெரிவிக்கையில்,” இந்த பறவைக் காய்ச்சல் கொரோனா பெருந்தொற்றை விட 100 மடங்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்து. இதன் உருமாற்றம் தீவிர வேகத்தில் இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.


பறவைக் காய்ச்சல்


பறவைக் காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளுயன்சா (Bird flu or avian influenza) என்னும் தொற்றுநோய் முதன்மையாக பறவைகளை பாதிக்கிறது.  பறவைக் காய்ச்சலின் மிகவும் பொதுவான வடிவமாக ’H5N1’ உள்ளது.இந்த வைரஸ் பொதுவாக மனிதனிடமிருந்து மனித தொடர்பு மூலம் பரவாது என்றாலும், மனித காய்ச்சல் வைரஸ்கள் மற்றும் H5N1 (Human flu viruses and H5N1) ஆகியவை சக மனிதர்களிடையே பரவக்கூடிய ஒரு புதிய வைரஸ் தொற்றை உருவாக்கக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.



பறவைக் காய்ச்சல் அறிகுறிகள்:



  • காய்ச்சல் - மிக அதிகமாக இருக்கும்.

  • தசை வலி

  • கடுமையான முதுகு வலி (முதுகின் மேல் பகுதி)

  • தலைவலி

  • இருமல் மற்றும் மூச்சுத் திணறல்

  • வயிற்றுப்போக்கு

  • வயிற்று வலி

  • சளியில் ரத்தம் இருப்பது

  • மார்பில் வலி

  • மூக்கு அல்லது ஈறுகளில் இரத்தப்போக்கு

  • கண்களில் நீர் வடிதல்

  • தலைச்சுற்றல்


அறிகுறிகள் தென்பட்டால்  செய்ய வேண்டியது என்ன? 



தொற்று அபாயத்தில் இருப்பவர்கள், இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால்  அல்லது  சுவாசக் கோளாறுகள் இருந்தாலோ அருகில் உள்ள சுகாதார மையம் அல்லது மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். 


பாதுகாப்பு 



  • இறந்த பறவைகள், நோய் பாதிப்பு உள்ள பறவைகள் ஆகியவற்றின் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.

  • கைகளை அடிக்கடி கழுவுவது நல்லது. 

  • தன் சுத்தம் பேணுதல் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும். 


உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் இந்த வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த மருந்துகள் இருப்பதாகவும் இன்னும் சில மருத்துவ நிறுவனங்கள் மருந்து தயாரிப்பதில் ஆர்வம் காட்டிவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.