தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமர் ஹுன் செனின் ஆட்சி நடந்து வருகிறது. சர்வாதிகாரியான அவர், ஜனநாயக போக்கிற்கு எதிராக நடந்து வருவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கருத்துரிமை நசுக்கப்பட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர். 


கம்போடியாவில் தொடரும் சர்வாதிகாரம்:


ஹுன் சென், எந்தளவுக்கு சர்வாதிகாரி என்றால், அங்கு இயங்கி வந்த ஒரு சில ஊடக நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டார். இந்த நிலையில், ஜனநாயகத்திற்கு சவால் விடும் நோக்கில் கம்போடியாவில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.


வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் வதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கம்போடிய நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்காக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.


பிரதமர் போடும் உத்தரவை அப்படியே பின்பற்றும் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டத்தை இயற்ற ஹுன் சென் கடந்த வாரம் உத்தரவிட்டார். சட்டத்தின்படி, ஜூலை 23ஆம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் வாக்களிக்காத எவரும் எதிர்காலத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.


தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம்:


இதுகுறித்து கம்போடியா நாட்டின் துணை பிரதமர் சார் கெங் கூறுகையில், "எதிர்கால தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவை சீர்குலைக்கும் நபர்களுக்கு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் மூலம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டது" என்றார்.


கடந்த 2018 தேர்தலில், ஹுன் சென்னின் கம்போடிய மக்கள் கட்சி (CPP) 6.9 மில்லியன் வாக்குகளில் 4.8 மில்லியன் வாக்குகளைப் பெற்றது. அந்த தேர்தலில், அக்கட்சி அனைத்து நாடாளுமன்ற இடங்களையும் வென்றது.


தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என வெளிப்படையாக அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், ஹுன் சென் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரம், அச்சுறுத்தும் விதமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். வரும் தேர்தலில், ஹுன் சென் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ள நிலையிலும் எதிர்க்கட்சிகளை சுத்தமாக துடைத்தெறிய ஹுன் சென் இப்படி செய்து வருவதாக ஜனநாயக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.