புர்கா அணியச் சொல்கிறீர்களே.. அது ஆஃப்கன் கலாச்சாரமே இல்லையே என்று தலிபான்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கின்றனர் அந்நாட்டுப் பெண்கள்.


ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சியை வீழ்த்தி மத அடிப்படைவாதிகளான தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளனர். அந்நாட்டின் இடைக்கால அரசின் பிரதமராக ஹசன் அகுந்த் பொறுப்பேற்றுள்ளார். துணைப் பிரதமராகப் பொறுப்பெற்றுள்ளார் முல்லா பரதார். ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே 1990களில் தலிபான்கள் ஆட்சியில் இருந்தனர்.


அப்போது அங்கு பெண்களுக்கு எவ்விதமான உரிமையும் இல்லை. பெண் பிள்ளைகள் கல்வி கற்க முடியாது. ஆண் துணையின்றி வெளியே வர முடியாது. அரசியலை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இவ்வாறாக அடிமைப்பட்டுக் கிடந்தா ஆப்கன் பெண்களுக்கு 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திரம் கிடைத்தது. 2004ல் அங்கு ஜனநாயக ஆட்சி அமைந்தது. அமெரிக்க, நேட்டோ படைகளின் கிடுக்கிப்பிடியால் தலிபான்கள் அடங்கிப் போயிருந்தனர். இதனால், ஆப்கன் பெண்கள் கல்வி கற்றனர், மாடலிங், சினிமா, அரசியல் என பலதுறையிலும் இடம்பெற்றனர். ஆனால், அத்தனைக் கனவுகளையும் தகர்க்கும் வகையில் அங்கு மீண்டும் தலிபான்களின் ஆட்சி அமைந்துள்ளது. முன்புபோல் எங்களின் ஆட்சி இருக்காது. இஸ்லாமியச் சட்டத்துக்கு உட்பட்டு நாங்கள் பெண்களுக்கு உரிமைகளை வழங்குவோம் என்று அவர்கள் கூறினாலும் இன்னமும் பல்வேறு அடக்குமுறைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டேதான் இருக்கின்றனர்.


மாணவிகள் கல்வி கற்கலாம் ஆனால் புர்கா அணிந்தே கல்வி நிலையத்துக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். ஆனால், ஆப்கன் பெண்களோ 90களில் இருந்ததுபோல் அஞ்சி நடுங்குபவர்களாக இல்லை. அவர்கள் தலிபான்களை எதிர்த்து வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர். கொலை மிரட்டலையும் துச்சமென மதித்து எதிர்ப்புக் குரலை எழுப்புகின்றனர்.






அந்த வகையில் புர்கா அணிய வேண்டும் என்று கூறிய தலிபான்களுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர் ஆப்கன் பெண்கள். ஆப்கானிஸ்தானில் முதன்முதலாக பாலின பாடங்களைக் கொண்டுவந்த டாக்டர் பஹார் ஜலாலில் தனது ட்விட்டர் பக்கத்தில் வண்ணமயமான ஆடையை அணிந்து, ஆப்கன் பெண்களின் பாரம்பரிய உடை இதுதான் என்று பதிவிட்டுள்ளார். அப்புறம் என்ன ஆப்கனைச் சேர்ந்த வெளிநாடுகளில் வாழும் பல்வேறு பெண்களும் இதை ஓர் இயக்கம் போல் முன்னெடுத்து ஆப்கன் வாழ் பெண்களின் பாரம்பரிய உடை என்று குறிப்பிட்டுக் காட்டி வண்ணமயமான உடைகள், காதணி, கைவலை, கழுத்தில் மணி கண்கவர் அணிகலன்களையும் அணிந்து ஆப்கன் பாரம்பரிய உடையைப் பிரபலப்படுத்தி வருகின்றனர்.


ஆப்கனில் பெண்கள் தற்போது அணிய நிர்பந்திக்கப்பட்டு வரும் முழுமையாக மூடும் புர்கா ஆடை, முகத்தை மறைக்கும் ஹிஜாப் என எதுவுமே ஆப்கன் பெண்களின் பாரம்பரிய உடையே இல்லை என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் இன்றைய ஹாட் சென்சேஷன் டாபிக்காக ஆப்கன் பெண்களின் பாரம்பரிய உடை இடம்பிடித்துள்ளது.