கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிராக இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால், பல நாடுகளும் கடுமையான முயற்சிக்கு பிறகு கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
ரஷ்யாவில் ஸ்புட்னிக், இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என்று உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானது என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனால், உலகில் சிலர் தடுப்பூசிக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பதுடன், தடுப்பூசிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கல்வேஸ்டன் கவுண்டியைச் சேர்ந்தவர் காரா ஹார்வுட். இவர் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். அவரது கணவரும் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். காரா ஹார்வுட் தடுப்பூசிக்கு எதிரான பல இடங்களில் பரப்புரையும் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவரும், அவரது குடும்பத்தினரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவரால், இவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது 4 வயது மகளான ஹேலி குக்கிற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற அனைவரை காட்டிலும் ஹேலி குக், கொரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையான காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளார்.
இதனால், அவருக்கு காய்ச்சலுக்கான மருந்துகளை அளித்துள்ளனர். திங்கட்கிழமை கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட ஹேலி குக், செவ்வாய்கிழமை ( நேற்று) காலை 7 மணியளவில் சுயநினைவின்றி இருந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்த ஒரே நாளில் தனது 4 வயது மகள் உயிரிழந்ததால் தாய் காரா ஹார்வுட், அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தன்னால்தான் தனது குழந்தை உயிரிழந்ததாகவும், தன்னுடைய முட்டாள்தனத்தால்தான் தனது குழந்தை உயிர் பறிபோனது என்றும் காரா ஹார்வுட் வேதனை தாங்காமல் புலம்பி வருகிறார். கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தம்பதியினர் எடுத்த முடிவால், அவர்களின்4 வயது குழந்தை பலியாகியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உலகிலே அதிகளவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்புகள் மட்டுமின்றி, அதிகளவு கொரோனா உயிரிழப்புகளும் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.