ராணுவம் என்றால் கண்காணிப்பும் கூடவே நினைவுக்கு வரும். கண்காணிப்புப் பணிகளுக்காக அன்றாடம் புதுப்புது உபகரணங்கள் உலகளவில் ராணுவ வட்டாரத்தில் பயன்பாட்டுக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் பிரிட்டன் கடற்படை பறக்கும் ஆடை (ஜெட் சூட்) ஒன்றை வெற்றிகரமாக ஒத்திகை பார்த்திருக்கிறது. நம் கைகளில் இன்று செல்போன் இருக்கிறது. விரல் நுணியில் இணைய வசதி இருக்கிறது. இன்னும் எத்தனை எத்தனையே தொழில்நுட்ப உபகரணங்கள் இருக்கின்றன. ஆனால், உலகில் இன்று தொழில்நுட்ப புரட்சியாகத் திகழும் பல கண்டுபிடிப்புகள் உண்மையில் முதலில் ராணுவப் பயன்பாட்டுக்காகவே கண்டுபிடிக்கப்பட்டன என்று கூறினால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்களா? அப்படியென்றால், கொஞ்சம் வாய்பிளந்து ஆச்சர்யப்பட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் உண்மை அதுதான்.
ஆரம்பகாலங்களில் ஆள் பலம் தான் ராணுவபலமாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போதெல்லாம் ராணுவ தளவாடங்கள் தொடங்கி எல்லாவற்றிலும் புதுமை, தொழில்நுட்பம்தான் முழுபலமாக கருதப்படுகிறது.
அந்த வரிசையில் பிரிட்டனின் ராயல் நேவி எனப்படும் கடற்படை வீரர்களுக்கு ஜெட் சூட் ஒன்றை பயன்படுத்தி ஒத்திகை பார்த்திருக்கிறது. இந்த பிரத்யேக உடையை அணிந்துகொண்டால் ஒரு வீரர் அந்தரத்தில் பறக்கமுடியும். அதற்காக விமானம் பறக்கும் உயரத்தில் என கற்பனை செய்துகொள்ளாதீர்கள். ஒரு சிறிய படகிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் கப்பலுக்கு நீங்கள் போக வேண்டுமென்றால் நீந்த வேண்டாம், இந்த பிரத்யேக உடையை அணிந்துகொண்டு பறந்து செல்லலாம். அழகாக கப்பலில் தரையிறங்கலாம். இப்படிப்பட்ட ஓர் உடையைத் தயாரிக்கும் யோசனை எங்கிருந்து வந்தது என்பதை அறிந்தால் நீங்கள் இன்னமும் ஆச்சர்யப்படுவீர்கள்.
அயர்ன் மேன் (Iron man) என்ற ஹாலிவுட் படத்திலிருந்தே இந்த யோசனையைப் பெற்றிருக்கிறார்கள். அந்தப் படத்தின் நாயகன் ராபர் டவுனி ஜூனியர் இத்தகைய பிரத்யேக ஆடையை அணிந்து கொண்டு சாகசங்களை செய்வார். உலகத்தைக் காக்கும் ஆபத்பாந்தவனான அந்த கதாபாத்திரம் அணிந்த அதே உடைதான் இன்று பிரிட்டன் கடற்படையில் நிஜமாகியிருக்கிறது.
இதற்கான ஒத்திகையை பிரிட்டன் கடற்படை அண்மையில் நடத்தியிருக்கிறது. ரோந்துப் படகிலிருந்து பிரிட்டிஷ் ராயல் மெரைன் வீரர்கள் எச்எம்எஸ் தமாரா (HMS Tamara) கப்பலில் தரையிறங்கும் நிகழ்வு ஒத்திகை பார்க்கப்பட்டது. ஒத்திகை மிகவும் நேர்த்தியாக, வெற்றிகரமாக நடைபெற்றது. ஒத்திகை வீடியோவை கடற்படையின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் மூத்த அதிகாரி அட்மைரல் டோனி ராடாகின் பகிர்ந்தார். அதில் அவர், இது நிச்சயமாக வியத்தகு மாற்றத்தை தரக்கூடிய உபகரணம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த பிரத்யேக ஜெட்சூட்டை கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸ் தயாரித்திருக்கிறது. இதனை ராணுவப் பயன்பாட்டுக்காக கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனைகளை நடைபெற்று வருகின்றன. மேலும், கப்பல்களுக்கு வீரர்கள் செல்வதற்குப் பயன்படுத்துவதைத் தவிர வேறெந்த வகைகளில் எல்லாம் இந்த ஜெட் சூட்டை பயன்படுத்தலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஜெட் சூட்டை அணிந்து கொண்டு வீரர்களை பருந்துப் பார்வையில் கண்காணிப்பில் ஈடுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறதாம்.