பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மோதலை, ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் பதில் நடவடிக்கைகள் போரில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, அப்பாவி மக்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதுமட்டும் இன்றி, காசா நகர மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்தியுள்ள வான்வழி தாக்குதல் உலக நாடுகளின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
அப்பாவி மக்களின் உயிரை காவு வாங்கும் இஸ்ரேல் போர்:
மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 500 பேர் உயிரிழந்திருக்கலாம் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக படுகாயம் அடைந்து, பாதுகாப்பு தேடி வரும் மக்கள் மீது இம்மாதிரியாக தாக்குதல் நடத்துவது மனிதாபிமானமற்ற செயல் என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
கடந்த 11 நாள்களாக நடந்து வரும் போரில் 3,478 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 12,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், இஸ்ரேலில் ஹமாஸ் படை நடத்திய தாக்குதலில் 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும் குழந்தைகள் உள்பட 199 பேரை ஹமாஸ் படை பணயக்கைதியாக பிடித்து வைத்திருப்பதாகவும் இஸ்ரேல் அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
பைடனை தொடர்ந்து இஸ்ரேலுக்கு சென்ற பிரட்டனர் பிரதமர்:
இந்த நிலையில், இஸ்ரேல் சென்றுள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய ரிஷி சுனக், "நானும் பிரட்டனும் உங்களுடன் துணை நிற்கிறோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். சொல்ல முடியாத கொடூரமான பயங்கரவாத கோர முகத்தை இஸ்ரேல் பார்த்துள்ளது" என்றார்.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "பிராந்தியத்தில் மேலும் வன்முறை அதிகரிக்காமல் இருக்க வேண்டியதன் அவசியத்தை பிரிட்டன் பிரதமரும் இஸ்ரேல் ஜனாதிபதி ஹெர்சாக்கும் வலியுறுத்தினர். இந்த முடிவை நோக்கி அவர்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமருக்கு முன்னதாக, நேற்று, இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்றிருந்தார். அங்கு பேசிய அவர், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணம் இல்லை என்றும் இஸ்லாமிய ஜிகாத் குழுவே காரணம் என குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து பேசிய அவர், "நான் பார்த்தவற்றின் அடிப்படையில், இதை மற்றொரு குழு செய்தது போல் தோன்றுகிறது. நீங்கள் அல்ல. இன்று, எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், காசாவில் ஒரு பயங்கரவாதக் குழுவால் ஏவப்பட்ட ராக்கெட்டின் காரணமாக இந்த சம்பவம் நடந்தது போல் தோன்றுகிறது" என்றார்.
மேலும் பேசிய அவர், "எங்களின் உதவிகளை ஹமாஸ் தடுத்து நிறுத்தினால், அதன் கதை முடியும். எகிப்த் அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி உண்மையான மரியாதைக்கு தகுதியானவர். ஏனெனில், இந்த விவகாரத்தில் அவர் அனைவருடனும் இணக்கமாக செயல்படுகிறார்" என்றார்.